ஆதியாகமம் 39:11-22
ஆதியாகமம் 39:11-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான், வீட்டு வேலைக்காரர் யாரும் உள்ளே இருக்கவில்லை. அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா” என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான். அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, தன் வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இதோ பாருங்கள், இந்த எபிரெயன் நம்மை அவமானப்படுத்தும்படி இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான்! அவன் என்னுடன் உறவுகொள்ளும்படி உள்ளே வந்தான். நான் கூச்சலிட்டேன். நான் உதவிகேட்டுக் கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன் மேலுடையை இங்கே விட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவனிடம் இந்தக் கதையைச் சொன்னாள்: “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரெய அடிமை என்னை அவமானப்படுத்தும்படி இங்கு வந்தான். நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். “இப்படித்தான் உம்முடைய அடிமை என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டதும், அவனுடைய கோபம் பற்றி எரிந்தது. யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் போட்டான். யோசேப்பு சிறையில் இருக்கும்போதும், யெகோவா யோசேப்போடே இருந்தார்; அவர் அவனுக்கு இரக்கங்காட்டி, சிறைச்சாலைத் தலைவனின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச்செய்தார். அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் அதிகாரியாக்கினான்; அங்கு செய்யப்படவேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான்.
ஆதியாகமம் 39:11-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான். அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: “பாருங்கள், எபிரெய மனிதன் நம்மை பரியாசம்செய்ய, போத்திபார் அவனை நம்மிடத்தில் கொண்டுவந்தார், அவன் என்னோடு உறவுகொள்வதற்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து, அவனை நோக்கி: “நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் தவறான எண்ணத்துடன் என்னிடத்தில் வந்தான். அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்” என்றாள். உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான். யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான்.
ஆதியாகமம் 39:11-22 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது. அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள். யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். ராஜாவினுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான். ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான்.
ஆதியாகமம் 39:11-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.