ஆதியாகமம் 39:1-10

ஆதியாகமம் 39:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

ஆதியாகமம் 39:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசேப்பு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டிருந்தான். பார்வோனுடைய அதிகாரிகளில் ஒருவனும், காவல் அதிகாரியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன், யோசேப்பைக் கொண்டுசென்ற இஸ்மயேலரிடம் அவனை விலைக்கு வாங்கினான். யெகோவா யோசேப்புடன் இருந்தார், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; அவன் எகிப்திய எஜமானுடைய வீட்டில் தங்கியிருந்தான். யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுக்கிறார் என்றும் அவன் எஜமான் கண்டான். அப்போது யோசேப்புக்கு அவனுடைய எஜமானின் கண்களில் தயவு கிடைத்தால், அவன் அவனுடைய எஜமானின் தனிப்பட்ட உதவியாளன் ஆனான். போத்திபார் அவனைத் தன் வீட்டுக்குப் பொறுப்பாக வைத்து, தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் கொடுத்தான். இவ்வாறாக அவனுடைய வீட்டுக்கும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றிற்கும் பொறுப்பாக யோசேப்பை அவன் நியமித்ததுமுதல், யோசேப்பின் நிமித்தம் அந்த எகிப்தியனின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். போத்திபாருக்கு அவனுடைய வீட்டிலும், வயல்வெளியிலும் உள்ள எல்லாவற்றிலும் யெகோவாவினுடைய ஆசீர்வாதம் இருந்தது. அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, அவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். சிலநாள் சென்றபின் போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் உறவுகொள்ள வா!” என அழைத்தாள். அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் கவனிப்பதில்லை; தனக்குச் சொந்தமாயுள்ள அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்புவித்துள்ளார். இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீ அவருடைய மனைவி என்பதால் உன்னைத்தவிர, வேறொன்றையும் அவர் என்னிடமிருந்து விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான கொடுமையான செயலைச் செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய என்னால் எப்படி முடியும்?” என்றான். அவள் நாளுக்குநாள் யோசேப்பைக் கட்டாயப்படுத்திய போதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை.

ஆதியாகமம் 39:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசேப்பு எகிப்திற்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்குத் தலைவனுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். யெகோவா யோசேப்போடு இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்கிற அனைத்தையும் யெகோவா வாய்க்கச்செய்கிறார் என்றும், அவனுடைய எஜமான் கண்டு; யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு வேலைக்காரனும் தன் வீட்டிற்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான அனைத்தையும் அவனுடைய கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டிற்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, யெகோவா யோசேப்பின்மூலம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் யெகோவாவுடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: “இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான். அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

ஆதியாகமம் 39:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான். கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான். அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான்.