ஆதியாகமம் 38:1-30

ஆதியாகமம் 38:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் யூதா தன் சகோதரரை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச்சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்கும்படி போனான். அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் எனப் பெயரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள். யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான். ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார். அப்பொழுது யூதா ஓனானிடம், “உன் சகோதரனின் மனைவியுடன் கூடிவாழ்ந்து, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி, ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான். ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான். இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார். அப்பொழுது யூதா, தன் மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகுமட்டும், நீ ஒரு விதவையாக உன் தகப்பன் வீட்டிற்குப்போய்க் குடியிரு” என்றான். “தன் மகன் சேலாவும் அவனுடைய சகோதரர்போல் இறந்துபோவான்” என்று எண்ணியே அப்படிச் சொன்னான். எனவே தாமார் தன் தகப்பன் வீட்டில் குடியிருக்கும்படி போனாள். அநேக நாட்களுக்குப்பின் சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்து முடித்தபின், திம்னாவில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் மனிதரிடம் போனான், அதுல்லாமியனாகிய அவனுடைய சிநேகிதன் ஈராவும் அவனுடன் போனான். “தன் செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குப் போகிறார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும், தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை அவள் அறிந்தாள். எனவே அவள் விதவைக்குரிய தன் உடைகளைக் களைந்து, தன்னை மறைப்பதற்காக முகத்திரையினால் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியில் உள்ள ஏனாயீம் ஊர்வாசலிலே உட்கார்ந்திருந்தாள். யூதா அவளைக் கண்டபோது, அவள் ஒரு வேசி என எண்ணினான்; ஏனெனில் அவள் தன் முகத்தை மூடியிருந்தாள். அவளைத் தன் மருமகள் என அறியாத யூதா வீதியோரமாய் இருந்த அவளிடம் போய், “நீ என்னுடன் உறவுகொள்ள வா” என்றான். அதற்கு அவள், “நான் உம்முடன் வந்தால் நீர் எனக்கு என்ன தருவீர்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “என் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புவேன்” என்றான். அவளோ, “அதை அனுப்பும்வரை ஏதாவதொரு பொருளை அடைமானமாகத் தருவீரா?” என்று கேட்டாள். அதற்கு யூதா, “உனக்கு அடைமானமாக நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தாரும்” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து, அவளுடன் உறவுகொண்டான்; அவனால் அவள் கர்ப்பவதியானாள். அவள் அவ்விடத்தை விட்டுப்போய், தன் முகத்திரையைக் கழற்றிவிட்டு, மறுபடியும் தனது விதவைக்குரிய உடைகளை உடுத்திக்கொண்டாள். அதேவேளை யூதா அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து, தான் அப்பெண்ணிடம் அடைமானமாகக் கொடுத்திருந்த பொருட்களை வாங்கிவரும்படி அனுப்பினான்; ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அங்குள்ள மனிதரிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் வேசி எங்கே?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அப்படியொரு கோயில் வேசி இங்கே இல்லை” என்றார்கள். ஆகவே, அவன் யூதாவிடம், “திரும்பிப்போய், நான் அவளைக் காணவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள மனிதரும், ‘அப்படியொரு கோயில் வேசி அங்கிருக்கவில்லை’ என்று சொன்னார்கள்” என்றான். யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக்கொள்ளட்டும்; திரும்பிப் போனால் நாம் கேலிப் பொருளாவோம். எப்படியும் நான் இந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் நீயோ அவளைக் காண முடியவில்லை” என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்றபின், “உமது மருமகள் தாமார், வேசித்தனம் செய்து, அதன் பலனாகக் கருவுற்றிருக்கிறாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்றான். அவள் வெளியே கொண்டுவரப்படும்போது, தன் மாமனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அதாவது: “இந்தப் பொருளுக்குரியவராலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும், இடைவாரும், கைக்கோலும் யாருடையது என்று உம்மால் சொல்லமுடியுமா பாரும்” என்று கேட்கும்படி அனுப்பினாள். யூதா அவற்றை அடையாளம் கண்டு, “என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்க மறுத்தபடியால், அவள் என்னைவிட நீதியானவளே” என்றான். அதன்பின் யூதா அவளுடன் உறவுகொள்ளவில்லை. அவளுக்குப் பேறுகாலம் வந்தபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகத் தெரிந்தது. அவள் பிள்ளை பெறுகிறபோது ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மகப்பேற்றுத் மருத்துவச்சி கருஞ்சிவப்பு நூலை எடுத்து, அதன் கையில் கட்டி, “இதுவே முதலில் வெளிப்பட்டது” என்றாள். ஆனால், அக்குழந்தை மறுபடியும் கையை உள்ளே இழுத்துக் கொண்டபோது, அவனுடைய சகோதரன் வெளியே வந்தான். அப்பொழுது மகப்பேற்றுத் தாதி, “நீ, மீறி முதலாவதாக வெளியே வந்ததென்ன?” என்றாள். அவனுக்கு பாரேஸ் எனப் பெயரிடப்பட்டது. அதன்பின் கையில் நூல் கட்டப்பட்ட அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்குச் சேரா எனப் பெயரிடப்பட்டது.

ஆதியாகமம் 38:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், யெகோவா அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு” என்றான். அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: “என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு” என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: “உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்ததால், அவள் ஒரு விலைமாது என்று நினைத்து, அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: “நான் உன்னிடத்தில் சேர வருவாயா” என்றான்; அதற்கு அவள்: “நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர்” என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன்” என்றான். அதற்கு அவள்: “நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா” என்றாள். அப்பொழுது அவன்: “நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும்” என்று கேட்டான். அதற்கு அவள்: “உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும்” என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: “வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “இங்கே விலைமாது இல்லை” என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: “அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள்” என்றான். அப்பொழுது யூதா: “இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும்” என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: “அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும்” என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை அடையாளம்கண்டு: “என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே” என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, “இது முதலாவது வெளிப்பட்டது” என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: “நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது. பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.

ஆதியாகமம் 38:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. அவளுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். அவள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். இன்னொரு குமாரன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர். யூதா தன் மூத்த குமாரனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான். இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார். பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய குமாரன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள். பின்னர் சூவாவின் குமாரத்தியான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான். தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள். எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய குமாரனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதை தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள். யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான். யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள். அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான். அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள். அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான். அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள். தாமார் தன் வீட்டிற்குப் போய் முக்காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான். அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர். எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான். அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான். மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர். யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான். அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள். யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் குமாரன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை. தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள். முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி. ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள். பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர்.

ஆதியாகமம் 38:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்தது போலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்திவராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபேது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.