ஆதியாகமம் 37:25-28

ஆதியாகமம் 37:25-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்? வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

ஆதியாகமம் 37:25-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: “நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே” என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள். அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

ஆதியாகமம் 37:25-28 பரிசுத்த பைபிள் (TAERV)

அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாக கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர். எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்? அதைவிட அவனை வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் நிறைய லாபம் கிடைக்குமே, சொந்த சகோதரனைக் கொன்றோம் என்ற பழியும் இருக்காதே” என்றான். மற்ற சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். மீதியானிய வியாபாரிகள் அருகில் வந்ததும் யோசேப்பைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை விற்றுவிட்டனர். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.

ஆதியாகமம் 37:25-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.