ஆதியாகமம் 37:1-28
ஆதியாகமம் 37:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான். யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான். இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான். தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள். யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும், தனது சகோதரருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன், “நீ என்ன கனவு கண்டிருக்கிறாய்? உன் தாயும் நானும் உன் சகோதரரும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கிறாயா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவன் சகோதரர் அவன்மீது பொறாமை கொண்டார்கள், அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டான். யோசேப்பின் சகோதரர் தங்கள் தகப்பனின் மந்தையை மேய்ப்பதற்காகச் சீகேமுக்கு அருகே போயிருந்தார்கள்; அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “உன் சகோதரர் சீகேமுக்கு அருகே மந்தை மேய்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்தானே, வா இப்பொழுது நான் உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப்போகிறேன்” என்றான். அதற்கு அவன், “நல்லது, நான் போகிறேன்” என்றான். எனவே, அவன் யோசேப்பிடம், “நீ போய் உன் சகோதரர் நலமாயிருக்கிறார்களா என்றும், மந்தைகள் எப்படியிருக்கின்றன என்றும் பார்த்து எனக்கு வந்து சொல்” என்றான். அப்படியே யோசேப்பை எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து வழியனுப்பினான். யோசேப்பு சீகேமுக்கு வந்துபோது, அவன் வயல்வெளியில் அலைந்து கொண்டிருப்பதை ஒரு மனிதன் கண்டு, “நீ என்ன தேடுகிறாய்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரரைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உம்மால் சொல்லமுடியுமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தானுக்குப் போவோம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்” என்றான். யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச்சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான். ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம். நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள். அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்? வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
ஆதியாகமம் 37:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது” என்றான். அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: “நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ”? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான். இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா” என்றான். அவன்: “இதோ, போகிறேன்” என்றான். அப்பொழுது அவன்: “நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, “என்ன தேடுகிறாய்”? என்று அவனைக் கேட்டான். அதற்கு அவன்: “என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்” என்றான். அந்த மனிதன்: “அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன்” என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து, ஒருவரை ஒருவர் நோக்கி: “இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி, அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான். யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி, அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: “நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே” என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள். அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
ஆதியாகமம் 37:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். இது யாக்கோபின் குடும்ப வரலாறு: யோசேப்பு ஓர் 17 வயது இளைஞன். தன் சகோதரர்களோடு சேர்ந்து ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்வது அவனது வேலை. பில்காள், சில்பாள், ஆகியோரின் குமாரர்களும் அவனோடு இருந்தனர் (பில்காளும, சில்பாளும் அவனது தந்தையின் மனைவிகள்.) யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த கெட்ட செயல்களைத் தந்தையிடம் சொன்னான். யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற குமாரர்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை. ஒரு நாள் யோசேப்புக்கு விசேஷமான கனவு வந்தது. அவன் அதனைச் சகோதரர்களிடம் சொன்னான். அதனால் அவர்கள் அவனை மேலும் வெறுத்தனர். யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன். நாம் எல்லோரும் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். கோதுமை அரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது என்னுடைய கட்டு நிமிர்ந்திருந்தது. உங்கள் கட்டுகள் என் கட்டுகளைச் சுற்றி வந்து வணங்கின” என்றான். அவனுடைய சகோதரர்கள், “இதனால் நீ ராஜாவாகி எங்களையெல்லாம் ஆளலாம் என்று நினைக்கிறாயா?” எனக் கேட்டனர். அவன் சகோதரர்கள் இக்கனவைப்பற்றி அறிந்தபிறகு அதிகமாக அவனை வெறுத்தனர். பிறகு யோசேப்புக்கு இன்னொரு கனவு வந்தது. அதையும் அவன் அவர்களிடம் சொன்னான். “நான் இன்னொரு கனவு கண்டேன். அதில் சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கின” என்றான். அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, “என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?” என்று கேட்டான். யோசேப்பின் சகோதரர்கள் தொடர்ந்து அவன்மீது பொறாமைகொண்டிருந்தனர், அவன் தந்தையோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டு, அது என்னவாக இருக்கும் என்று யோசனை செய்தான். ஒரு நாள் யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிற்குத் தங்கள் தந்தையின் ஆடுகளை மேய்க்கப் போனார்கள். சில நாட்களான பின்பு யாக்கோபு யோசேப்பிடம், “சீகேமிற்குப் போ. அங்கு உன் சகோதரர்கள் ஆடு மேய்க்கிறார்கள்” என்றான். யோசேப்பும், “நான் போகிறேன்” என்று கூறினான். யாக்கோபு அவனிடம், “போய் உன் சகோதரர்களும், ஆடுகளும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்து வா” என்றான். அவனை எபிரோன் சமவெளியிலிருந்து சீகேமிற்கு அனுப்பினான். சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். “நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான். அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான். யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர். ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர். அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாக கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர். எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்? அதைவிட அவனை வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் நிறைய லாபம் கிடைக்குமே, சொந்த சகோதரனைக் கொன்றோம் என்ற பழியும் இருக்காதே” என்றான். மற்ற சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். மீதியானிய வியாபாரிகள் அருகில் வந்ததும் யோசேப்பைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை விற்றுவிட்டனர். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
ஆதியாகமம் 37:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்ட போது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான். அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.