ஆதியாகமம் 36:1-43

ஆதியாகமம் 36:1-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் வம்சவரலாறு: ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து மனைவிகளை எடுத்தான்: ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் திருமணம் செய்தான். அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான். ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள். அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றாள். கானானில் ஏசாவுக்கு பிறந்த மகன்கள் இவர்களே. ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான். அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான். சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தகப்பனான ஏசாவின் வம்சவரலாறு. ஏசாவின் மகன்களின் பெயர்கள் இவையே: ஏசாவின் மனைவியான ஆதாளின் மகன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் மகன் ரெகுயேல். எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். ஏசாவின் மகன் எலிப்பாஸுக்கு திம்னாள் என்னும் வைப்பாட்டி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்கள். ரெகுயேலின் மகன்கள்; நாகாத், செராகு, சம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள். சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். ஏசாவின் சந்ததிகளில் வந்த வம்சத்தலைவர்கள்: ஏசாவின் மூத்த மகனான எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த வம்சத்தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்கள். ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்: நகாத், செராகு, சம்மா, மீசா ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த வம்சத்தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள். ஏசாவின் மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் வழிவந்தவர்கள். ஏதோம் என்னும் ஏசாவின் மகன்கள் இவர்களே. இவர்கள் அவர்களின் வம்சத்தலைவர்கள். அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர். லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி. சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு என்பவர்கள். இந்த ஆனாகுவே, தன் தகப்பன் சிபியோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தவன். ஆனாகின் பிள்ளைகள்: திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள். ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். திஷானுடைய மகன்கள். ஊத்ஸ், அரான் என்பவர்கள். ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள். இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது. பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான். உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது. ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான். சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான். சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான். அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சார், மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே.

ஆதியாகமம் 36:1-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு: ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும், இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான். ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள். அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள். ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான். அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது. ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர். சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர். எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள். ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள். சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள். ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, சூடான தண்ணிரைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள். திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு, திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள். இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர். பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர். ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள். தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஆதியாகமம் 36:1-43 பரிசுத்த பைபிள் (TAERV)

இது ஏசாவின் குடும்ப வரலாறு. ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற குமாரன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற குமாரன் பிறந்தான். அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று குமாரர்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர். யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு) ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு: ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த குமாரன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த குமாரன் ரெகுவேல். எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து குமாரர்கள். எலிப்பாசுக்கு திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற குமாரன் பிறந்தான். ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு குமாரர்கள். இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள். ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் குமாரத்தி ஆனாகினின் குமாரத்தியான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் குமாரர்களைப் பெற்றாள். ஏசாவின் குமாரர்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர். ஏசாவின் மூத்த குமாரன் எலீப்பாஸ். எலீப்பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள். ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் குமாரர்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள். ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள். இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏதசேர், திஷான் என்னும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் குமாரர்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் குமாரர்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் குமாரர்கள் இருந்தனர். சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் குமாரர்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான். ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர். திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் குமாரர்கள் இருந்தனர். ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் குமாரர்கள் இருந்தனர். திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் குமாரர்கள் இருந்தனர். ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள். அப்பொழுது ஏதோமிலே ராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர். பேயோர் எனும் ராஜாவின் குமாரனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான். பேலா மரித்ததும் யோபாப் ராஜா ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் குமாரன். யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன். ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் குமாரன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன். ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன். சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன். சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய குமாரன். பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் குமாரத்தி. ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான். ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

ஆதியாகமம் 36:1-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு: ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும், இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான். ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள். அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர். ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப்போனான். அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர். சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர். எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர். ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர். சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள். ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி. திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள். ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு. திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள். இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர். பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான். யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான். உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர். ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சம்லா மரித்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள். தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு, அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு. மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.