ஆதியாகமம் 34:24-31

ஆதியாகமம் 34:24-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பட்டணத்து வாசலுக்கு வெளியே போன மனிதர் எல்லோரும் ஏமோரும் அவன் மகன் சீகேமும் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டார்கள்; அவ்வாறே பட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர்கள் யாவரும் இன்னும் நோவுடன் இருக்கையில், தீனாளின் சகோதரர்களான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்களும் வாள்களுடன் போய், பட்டணத்து மக்கள் எதிர்பாராத வேளையில் அதைத் தாக்கி, எல்லா ஆண்களையும் கொன்றார்கள். ஏமோரையும் அவன் மகன் சீகேமையும் வாளால் வெட்டிக் கொன்றபின், சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். பட்டணத்து மனிதர் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கையில் யாக்கோபின் மகன்கள் அந்த உடல்களின்மேல் நடந்து வந்து, தங்கள் சகோதரியைக் கறைப்படுத்திய அந்தப் பட்டணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் ஆடுமாடுகளையும், கழுதைகளையும் மற்றும் பட்டணத்திலும் வயல்வெளிகளிலும் உள்ள அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அபகரித்தார்கள். அவர்கள் அங்கிருந்த எல்லா செல்வத்தையும், பெண்கள் பிள்ளைகள் எல்லோரையும், வீடுகளிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையாகக் கொண்டுபோனார்கள். அப்பொழுது யாக்கோபு தன் மகன்களான சிமியோன், லேவி ஆகியோரிடம், “இந்நாட்டில் வாழும் கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் பெயரை நாசமாக்கி, எனக்குக் கஷ்டத்தை உண்டு பண்ணிவிட்டீர்களே! நாமோ மிகச் சிலர், அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்கினால், நானும் என் குடும்பமும் அழிந்துபோவோமே!” என்றான். அதற்கு அவர்கள், “அப்படியானால் எங்கள் சகோதரி தீனாளை அவன் ஒரு வேசியைப்போல் நடத்தியது சரியோ?” என்று கேட்டார்கள்.

ஆதியாகமம் 34:24-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். மூன்றாம் நாளில் அவர்களுக்கு வலி அதிகமானபோது, யாக்கோபின் மகன்களும் தீனாளின் சகோதரர்களுமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டுபேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாகப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள். ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு, அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் அனைத்தையும், அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான். அதற்கு அவர்கள்: “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ” என்றார்கள்.

ஆதியாகமம் 34:24-31 பரிசுத்த பைபிள் (TAERV)

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் ஆனதும் விருத்தசேதனம் செய்துகொண்ட ஆண்களுக்குப் புண் ஆறாமல் இருந்தது. யாக்கோபின் குமாரர்களில் இருவரான சிமியோனும் லேவியும், பட்டணத்திலுள்ள ஆண்களின் நிலையை அறிந்துகொண்டு, அங்கு போய் ஆண்களை எல்லாம் வெட்டிக் கொன்றார்கள். தீனாளின் சகோதரர்களாகிய சிமியோனும் லேவியும் ஏமோரையும் சீகேமையும் கொன்றனர். பிறகு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் வீட்டை விட்டு வெளியேறினர். யாக்கோபின் குமாரர்கள் நகரத்திற்குள் போய் அங்குள்ள செல்வங்களையெல்லாம் கொள்ளையிட்டனர். அவர்கள் தங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக இன்னும் கோபம் தணியாமல் இருந்தனர். அவர்கள் எல்லா மிருகங்களையும் கொண்டு சென்றதுடன், கழுதைகளையும் பிறவற்றையும் வயலில் உள்ளவற்றையும் எடுத்துக்கொண்டனர். தீனாளின் சகோதரர்கள் சீகேம் ஜனங்களின் அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டதோடு அவர்களின் மனைவி மார்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டனர். ஆனால் யாக்கோபு, “நீங்கள் எனக்கு மிகுதியாகத் தொல்லை கொடுக்கிறீர்கள். இந்தப் பகுதியிலுள்ள அனைவரும் என்னை வெறுப்பார்கள். அனைத்து கானானியர்களும் பெரிசியர்களும் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். நாம் கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம். இங்குள்ள ஜனங்கள் எல்லாம் கூடி நம்மோடு சண்டைக்கு வந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம். நமது ஜனங்கள் அனைவரும் அழிந்து போவார்கள்” என்று சிமியோனிடமும் லேவியிடமும் சொன்னான். ஆனால் அச்சகோதர்களோ, “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போன்று நடத்தினார்களே. அதை நாங்கள் அனுமதிக்க முடியுமா? முடியாது. அவர்கள் எங்கள் சகோதரிக்குத் தீங்கு செய்துவிட்டனர்” என்றார்கள்.

ஆதியாகமம் 34:24-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும், அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின் மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். மேலும், யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு, அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்