ஆதியாகமம் 33:1-20

ஆதியாகமம் 33:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, தொலைவில் ஏசா நானூறு பேருடன் வருவதைக் கண்டான்; ஆகவே அவன் லேயாளிடமும், ராகேலிடமும், இரு பணிப்பெண்களிடமும் பிள்ளைகளைப் பிரித்துக்கொடுத்தான். இருபணிப் பெண்களையும் அவர்கள் பிள்ளைகளையும், முன்னால் நிறுத்தினான். அடுத்தாக லேயாளையும் அவள் பிள்ளைகளையும், கடைசியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினான். அவர்களுக்கு முன்பாகச் சென்ற யாக்கோபு, தன் சகோதரனாகிய ஏசா நெருங்கிவந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஏழுமுறை தரைமட்டும் குனிந்து அவனை வாழ்த்தினான். ஆனால் ஏசாவோ, யாக்கோபைக் கண்டதும் ஓடிப்போய், அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இருவருமே அழுதார்கள். பின்பு ஏசா நிமிர்ந்து பார்த்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டபோது, “உன்னோடிருக்கும் இவர்கள் யார்?” என்று யாக்கோபிடம் கேட்டான். அதற்கு அவன், “இவர்கள் உமது அடியவனாகிய எனக்கு இறைவன் கிருபையாய்த் தந்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்து குனிந்து வணங்கினார்கள். அடுத்ததாக லேயாளும் தன் பிள்ளைகளுடன் வந்து வணங்கினாள். கடைசியாக ராகேலும் யோசேப்பும் வந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா, “நான் வழியிலே சந்தித்த மிருகக் கூட்டங்களை நீ அனுப்பியதன் காரணம் என்ன?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “ஆண்டவனே! அது உம்முடைய கண்களில் தயவு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே” என்றான். அதற்கு ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் ஏராளம் இருக்கின்றன. உன்னிடம் உள்ளவற்றை நீயே வைத்துக்கொள்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படியல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடமிருந்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும். இப்பொழுது என்னை நீர் தயவாய் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், நான் உமது முகத்தைப் பார்ப்பது இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. இறைவன் என்மேல் இரக்கமுடையவராயிருக்கிறார், எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் இருக்கின்றன. எனவே உமக்குக் கொண்டுவரப்பட்ட அன்பளிப்புகளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறு அவன் வற்புறுத்தியபடியால் ஏசா அவற்றை ஏற்றுக்கொண்டான். அதன்பின்பு ஏசா, “வா, நாம் புறப்பட்டுச் செல்வோம்; நான் உன்முன் செல்கிறேன்” என்று யாக்கோபைக் கூப்பிட்டான். அதற்கு யாக்கோபு ஏசாவிடம், “எனது பிள்ளைகளோ சிறு குழந்தைகள், அதோடு பால் கொடுக்கும் ஆடுகளையும், பசுக்களையும் நான் கவனிக்க வேண்டும் என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக்கொண்டு போனால் எல்லா மிருகங்களும் இறந்துவிடும். ஆகையால் என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே செல்லும்; நான் உமக்குப் பின்னால் என் பிள்ளைகளுடைய மந்தைகளுடைய நடையின் வேகத்திற்குத் தக்கதாக நடந்து, உமது இருப்பிடமாகிய சேயீரை வந்து சேருவேன்” என்றான். அப்பொழுது ஏசா, “அப்படியானால் என்னுடைய ஆட்களில் சிலரை உன்னுடன் விட்டுப் போகிறேன்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படிச் செய்வானேன்? என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால் மட்டும் போதும்” என்றான். எனவே ஏசா, அன்றைக்கே சேயீருக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டான். ஆனால் யாக்கோபு, சுக்கோத்துக்குப் போய் அங்கே தனக்கு ஒரு இடத்தை அமைத்து, தன் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடில்களைப் போட்டான், அதினாலேயே அந்த இடத்திற்குச் சுக்கோத் என்னும் பெயர் வந்தது. பின்பு யாக்கோபு பதான் அராமிலிருந்து புறப்பட்டு, பாதுகாப்பாக கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு வந்து, அங்கே அந்த பட்டணம் தெரியக்கூடிய இடத்தில் கூடாரம் அமைத்தான். யாக்கோபு தான் கூடாரம் அமைத்த அந்த நிலத்தை, ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். அங்கே யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, ஏல்எல்லோகே இஸ்ரயேல் என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 33:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து, மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி: தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான். அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான். அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான். அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான். அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும். என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்” என்றான். அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான். அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான். யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான். யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான். தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 33:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள் குழந்தைகளும் ஒரு குழு. ராகேலும் யோசேப்பும் இன்னொரு குழு. இரண்டு வேலைக்காரிகளும் அவர்களின் பிள்ளைகளும் தனித்தனியாக இரண்டு குழுக்கள். யாக்கோபு முதலில் வேலைக்காரிகளையும் பிள்ளைகளையும் நிற்க வைத்தான். பின் லேயாளும் அவள் பிள்ளைகளும். கடைசியில் ராகேல் மற்றும் யோசேப்பு இருவரையும் நிற்க வைத்தான். யாக்கோபு ஏசாவிடம் முதலில் போனான். அவன் போகும்போதே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினான். அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான். யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான். பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள். ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான். யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான். ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான். அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான். ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான். ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும். எனவே நீங்கள் போய்க்கொண்டே இருங்கள், நான் மெதுவாகப் பின் தொடர்ந்து வருகிறேன். ஆடுமாடுகளும் மற்ற மிருகங்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நான் மெதுவாக வருகிறேன். என் குழந்தைகள் மிகவும் சோர்ந்து போகாதபடி மெதுவாக வருகிறேன். நான் உங்களை சேயீரில் சந்திப்பேன்” என்றான். எனவே ஏசா, “பிறகு நான் எனது சில மனிதர்களை உனக்கு உதவியாக விட்டுவிட்டுப் போகிறேன்” என்றான். ஆனால் யாக்கோபு, “உம் அன்புக்காக நன்றி, ஆனால் அது தேவையில்லை” என்றான். எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான். ஆனால் யாக்கோபோ சுக்கோத்திற்குப் பயணம் செய்தான். அங்கே அவன் தனக்கென்று வீடு கட்டிக்கொண்டதுடன், மிருகங்களுக்கும் தொழுவம் அமைத்துக்கொண்டான். எனவே அந்த இடம் சுக்கோத் என்று பெயர் பெற்றது. யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு அருகில் முடித்துவிட்டான். நகரத்திற்கு அருகிலுள்ள வயலில் தன் கூடாரத்தைப் போட்டான். யாக்கோபு அந்த வயலைச் சீகேமின் தந்தையான ஏமோரிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அதற்கு 100 வெள்ளிக் காசுகள் கொடுத்தான். யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 33:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரி களிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து, பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி: தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான். அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான். அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான். அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான். அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான். யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான். யாக்கோபு பதான்அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.