ஆதியாகமம் 3:6-21

ஆதியாகமம் 3:6-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதாயும், பார்வைக்கு அழகானதாயும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாயும் இருக்கக் கண்டாள்; அவள் அதின் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பின்பு அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் சாப்பிடக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். பிறகு அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, முன்னர் அறிந்திராத விஷயங்களை அறிந்துகொண்டார்கள்; அப்பொழுது தாங்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தியிலைகளைத் தைத்துத் தங்களை மூடிக்கொண்டார்கள். அன்று மாலை தென்றல் காற்று வீசிய வேளையில், இறைவனாகிய யெகோவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் தோட்டத்தின் மரங்களுக்கு இடையில் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள். ஆனாலும் இறைவனாகிய யெகோவா மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் தோட்டத்தில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணியாய் இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். அதற்கு யெகோவா, “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிட வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ சாப்பிட்டாயோ?” என்று கேட்டார். அதற்கு மனிதன், “என்னுடன் இங்கு இருப்பதற்கு நீர் எனக்குத் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள்; நான் சாப்பிட்டேன்” என்றான். பின்பு இறைவனாகிய யெகோவா அந்த பெண்ணிடம், “நீ செய்திருக்கும் இந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, அதனால்தான் நான் சாப்பிட்டேன்” என்று சொன்னாள். அதனால் இறைவனாகிய யெகோவா பாம்பிடம் சொன்னதாவது: “நீ இவ்வாறு செய்திருக்கிறபடியால், “வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிகமாய் சபிக்கப்பட்டிருப்பாய்! நீ வயிற்றினால் ஊர்ந்து திரிவாய்; உன் உயிருள்ள நாளெல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும் இடையிலும், உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும் நான் பகையை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரது குதிங்காலை நசுக்குவாய்.” அதன்பின்பு அவர் பெண்ணிடம் சொன்னதாவது: “உன் குழந்தைபேற்றின் வேதனையை அதிகமாய்க் கூட்டுவேன்; வேதனையோடு நீ குழந்தைகளைப் பெறுவாய்; உன் ஆசை உன் கணவன் மேலேயே இருக்கும், அவன் உன்னை ஆண்டு நடத்துவான்.” அவர் ஆதாமிடம் சொன்னதாவது: “ ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால், “உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்; உன் வாழ்நாளெல்லாம் நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய். பூமி முற்களையும் முற்புதர்களையும் உனக்கு விளைவிக்கும், வயலின் பயிர்களையே நீ சாப்பிடுவாய். நீ புழுதியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ புழுதிக்குத் திரும்பும்வரை, நெற்றி வியர்வை சிந்தியே உன் உணவைச் சாப்பிடுவாய்; நீ புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்டதால் புழுதிக்கே திரும்புவாய்.” ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான், ஏனெனில் பூமியில் வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள். இறைவனாகிய யெகோவா தோலினால் உடைகளைச் செய்து, ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் உடுத்தினார்.

ஆதியாகமம் 3:6-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார். அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” என்றார். அதற்கு ஆதாம்: “என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” என்றான். அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள். அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார். அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய். அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய். நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார். ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள். தேவனாகிய யெகோவா ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.

ஆதியாகமம் 3:6-21 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான். இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர். பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவன், “எனக்காக உம்மால் படைக்கப்பட்ட இந்தப் பெண் அந்த மரத்தின் கனியைக் கொடுத்தாள். நான் உண்டுவிட்டேன்” என்றான். பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள். எனவே தேவனாகிய கர்த்தர் பாம்பிடம்: “நீ இந்தத் தீய செயலைச் செய்தபடியால், மற்ற எந்த மிருகத்தை விடவும் நீ மிகவும் துன்பப்படுவாய். நீ உன் வயிற்றாலேயே ஊர்ந்து திரிவாய். வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வாய். உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன். அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன். அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய், அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொன்னார். பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம்: “நீ கருவுற்றிருக்கும்போது உனது வேதனையை அதிகப்படுத்துவேன். அதுபோல் நீ பிரசவிக்கும்போதும் அதிக வேதனைப்படுவாய். உனது ஆசை உன் கணவன் மேலிருக்கும். அவன் உன்னை ஆளுகை செய்வான்” என்றார். பின்பு தேவனாகிய கர்த்தர் ஆணிடம்: “அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது என்று உனக்கு ஆணையிட்டிருந்தேன். ஆனால் நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு அந்த கனியை உண்டுவிட்டாய். ஆகையால் உன்னிமித்தம் இந்தப் பூமி சபிக்கப்பட்டிருக்கும். எனவே நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மிகுந்த கஷ்டத்துடன் பூமியின் பலனைப் பெறுவாய். இந்தப் பூமி உனக்கு முள்ளையும் களையையும் தரும். விளையும் பயிர்களை நீ உண்பாய். உனது முகம் வேர்வையால் நிறையும்படி கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய். மரிக்கும்வரை நீ கஷ்டப்பட்டு உழைப்பாய். உன்னை மண்ணால் உருவாக்கினேன். நீ மரிக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள். தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.

ஆதியாகமம் 3:6-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.