ஆதியாகமம் 3:22-24
ஆதியாகமம் 3:22-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் இறைவனாகிய யெகோவா, “மனிதன் இப்பொழுது நன்மையையும் தீமையையும் அறிந்து, நம்மில் ஒருவரைப்போல் ஆகிவிட்டான். அவன் தன் கையை நீட்டி, வாழ்வளிக்கும் மரத்திலிருந்து பறித்துச் சாப்பிட்டு, என்றென்றைக்கும் உயிர்வாழ இடமளிக்கக் கூடாது” என்றார். எனவே இறைவனாகிய யெகோவா, நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட அவனை நிலத்தையே பண்படுத்திப் பயிர்செய்யும்படி, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தினார். அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டபின், ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக கேருபீன்களையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி வைத்தார்.
ஆதியாகமம் 3:22-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
ஆதியாகமம் 3:22-24 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு தேவனாகிய கர்த்தர், “இதோ, நன்மை தீமை அறிந்தவனாக மனிதன் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் பழத்தை எடுத்து உண்டால் என்றென்றும் உயிருடன் இருப்பான்” என்றார். ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். தேவனாகிய கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்திவிட்டு அதனைப் பாதுகாக்க தோட்டத்தின் நுழை வாசலில் கேருபீன்களை வைத்தார். அதோடு தேவனாகிய கர்த்தர் நெருப்பு வாளையும் வைத்தார். அது மின்னிக்கொண்டு, ஜீவமரத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிக் காவல் செய்தது.
ஆதியாகமம் 3:22-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.