ஆதியாகமம் 3:1-11

ஆதியாகமம் 3:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனாகிய யெகோவா உண்டாக்கியிருந்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள எந்த ஒரு மரத்திலிருந்தும் சாப்பிடவேண்டாம் என்று இறைவன் உங்களுக்குச் சொன்னாரோ?” எனக் கேட்டது. அதற்கு அந்தப் பெண் பாம்பிடம், “தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்; ஆனால் இறைவன், ‘நீங்கள் தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்திலிருந்து பழத்தை சாப்பிடக்கூடாது, அதைத் தொடவும் கூடாது, மீறினால் சாவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றாள். அதற்குப் பாம்பு அந்தப் பெண்ணிடம், “நிச்சயமாக நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று சொன்னது. “ஏனெனில் அந்த மரத்திலிருந்து சாப்பிடும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் இறைவனைப் போலாகி, நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும்” என்றது. அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதாயும், பார்வைக்கு அழகானதாயும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாயும் இருக்கக் கண்டாள்; அவள் அதின் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பின்பு அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் சாப்பிடக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். பிறகு அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, முன்னர் அறிந்திராத விஷயங்களை அறிந்துகொண்டார்கள்; அப்பொழுது தாங்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தியிலைகளைத் தைத்துத் தங்களை மூடிக்கொண்டார்கள். அன்று மாலை தென்றல் காற்று வீசிய வேளையில், இறைவனாகிய யெகோவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் தோட்டத்தின் மரங்களுக்கு இடையில் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள். ஆனாலும் இறைவனாகிய யெகோவா மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் தோட்டத்தில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணியாய் இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். அதற்கு யெகோவா, “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிட வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ சாப்பிட்டாயோ?” என்று கேட்டார்.

ஆதியாகமம் 3:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது. பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள். அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது. அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார். அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” என்றார்.

ஆதியாகமம் 3:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனாகிய கர்த்தரால் படைக்கப்பட்ட விலங்குகளிலேயே பாம்பானது மிகவும் தந்திர குணமுள்ளதாயிருந்தது. அது அவளிடம், “பெண்ணே! தேவன் உங்களிடம் இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் பழங்களை உண்ணக்கூடாது என்று உண்மையில் கூறினாரா?” என்று கேட்டது. அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம். ஆனால் ‘இத்தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்ணக் கூடாது. அம்மரத்தைத் தொடவும் கூடாது. இதை மீறினால் மரணமடைவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” எனப் பதில் சொன்னாள். ஆனால் பாம்போ அவளிடம், “நீங்கள் மரிக்கமாட்டீர்கள். தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது. அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான். இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர். பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.

ஆதியாகமம் 3:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்