ஆதியாகமம் 28:16-22

ஆதியாகமம் 28:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான். அவன் பயந்து, “இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்” என்றான். மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். அந்த இடத்திற்கு அவன் பெத்தேல் என்று பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணம் லூஸ் என்று அழைக்கப்பட்டிருந்தது. பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, சாப்பிட உணவும், உடுக்க உடையும் தந்து, பாதுகாப்புடன் என் தகப்பன் வீட்டுக்குத் திரும்பி வரப்பண்ணுவாரானால், யெகோவாவே என் இறைவனாயிருப்பார். நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குக் கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான்.

ஆதியாகமம் 28:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான். அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான். அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது. அப்பொழுது யாக்கோபு: “தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

ஆதியாகமம் 28:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)

உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான். அவனுக்கு பயம் வந்தது, “இது மிகச் சிறந்த இடம். இது தேவனுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றான். யாக்கோபு அதிகாலையில் எழுந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி வைத்து, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். இவ்வாறு அவன் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினான். இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான். பின் யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார். இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.

ஆதியாகமம் 28:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்