ஆதியாகமம் 28:12-15

ஆதியாகமம் 28:12-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத்திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

ஆதியாகமம் 28:12-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது அவன் ஒரு ஏணி பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டான்; அதிலே இறைவனின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். யெகோவா அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய யெகோவா நானே. உனக்கும் உன் சந்ததிக்கும், நீ படுத்திருக்கிற இந்த நாட்டைத் தருவேன். உன் சந்ததிகள் பூமியின் புழுதியைப்போல் பெருகுவார்கள். நீ மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவுவாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னுடனே இருக்கிறேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவேமாட்டேன்” என்றார்.

ஆதியாகமம் 28:12-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள். அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார்.

ஆதியாகமம் 28:12-15 பரிசுத்த பைபிள் (TAERV)

யாக்கோபு ஒரு கனவு கண்டான். கனவில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாய் இருந்த ஒரு ஏணியைக் கண்டான். தேவதூதர்கள் அதில் ஏறி மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தனர். கர்த்தர் ஏணியின் அருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டான். கர்த்தர், “நானே தேவன். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் நானே தேவன். நான் ஈசாக்குக்கும் தேவன். இப்போது நீ படுத்திருக்கிற பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும். “நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலகமாட்டேன்” என்றார்.