ஆதியாகமம் 27:19-33
ஆதியாகமம் 27:19-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு யாக்கோபு தன் தகப்பனிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கிறேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானோ அல்லவோ என தொட்டுப் பார்க்கும்படி, என் அருகில் வா” என்றான். யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப்பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல்; கைகளோ ஏசாவின் கைகள்” என்றான். அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். அவனும், “ஆம், நான்தான்” என்றான். அப்பொழுது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியில் கொஞ்சத்தை நான் சாப்பிடும்படி என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். யாக்கோபு அதைக் கொண்டுவந்தான். அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தான், ஈசாக்கு அதைக் குடித்தான். அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். யாக்கோபு தன் தகப்பனருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் மணத்தை முகர்ந்து பார்த்து, அவனை ஆசீர்வதித்து சொன்னது: “ஆஹா, என் மகனின் மணம் யெகோவா ஆசீர்வதித்த வயலின் மணத்தைப்போல் இருக்கிறது. இறைவன் உனக்கு வானத்தின் பனியையும், மண்ணின் வளத்தையும் கொடுப்பாராக. தானியத்தையும், திராட்சை இரசத்தையும் நிறைவாய் தருவாராக. நாடுகள் உனக்குப் பணி செய்வார்களாக. மக்கள் கூட்டங்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்களாக. உன் சகோதரரின்மேல் நீ முதன்மையானவனாய் இருப்பாய், உன் தாயின் மகன்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்களாக. உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.” ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான். அவனும் இறைச்சியைச் சுவையுள்ள உணவாகச் சமைத்து தன் தகப்பனிடம் கொண்டுவந்தான். அவன், “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள்” என்றான். அப்பொழுது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு அவன், “நான் உம்முடைய மகன்; மூத்த மகனான ஏசா” என்றான். ஈசாக்கு வெகுவாய் நடுங்கி, “அப்படியானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான்.
ஆதியாகமம் 27:19-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான். அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: “என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா” என்றான். யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கினருகில் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: “சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்” என்று சொல்லி, அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து, “நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான். அப்பொழுது அவன்: “என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா” என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான். அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக. மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: “உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான். அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: “வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
ஆதியாகமம் 27:19-33 பரிசுத்த பைபிள் (TAERV)
யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த குமாரன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான். ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான். இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான். பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் குமாரன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான். யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான். எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய குமாரன் ஏசாதானா?” என்று கேட்டான். யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான். பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான். பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான். “என் குமாரன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான். கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய். எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும். நாடுகள் உனக்கு அடிபணியட்டும். உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய். உன் தாயின் குமாரர்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள். “உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள். உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான். தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் குமாரன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான். ஆனால் ஈசாக்கோ “நீ யார்” என்று கேட்டான். “நான்தான் உங்கள் மூத்தகுமாரன் ஏசா” என்றான். அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
ஆதியாகமம் 27:19-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியும் என்றான். அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி, அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான். அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என்கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான். அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும்கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான். அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.