ஆதியாகமம் 26:1-6
ஆதியாகமம் 26:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆபிரகாம் காலத்திலிருந்த பஞ்சத்தைவிட நாட்டில் இன்னுமொரு பஞ்சம் உண்டானது. அதனால் ஈசாக்கு கேராரிலுள்ள பெலிஸ்திய அரசனான அபிமெலேக்கிடம் போனான். அப்பொழுது யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நீ எகிப்திற்குப் போகவேண்டாம்; நான் உன்னைக் குடியிருக்கச் சொல்லும் நாட்டில் குடியிரு. சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கியிரு, நான் உன்னுடன் இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். இந்த நாடுகள் எல்லாவற்றையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, நான் உன் தகப்பன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக்கொடுத்த சத்தியத்தை உறுதிப்படுத்துவேன். நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியின் மூலமாக பூமியில் உள்ள எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். ஏனெனில், ஆபிரகாம் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் ஒப்படைத்தவற்றையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்ட விதிகளையும் நிறைவேற்றினான்” என்றார். இதனால் ஈசாக்கு கேராரிலே தங்கியிருந்தான்.
ஆதியாகமம் 26:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான். யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நீ எகிப்திற்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு. இந்தத் தேசத்தில் குடியிரு; நான் உன்னோடுகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் அனைத்தையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் அனைத்தையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
ஆதியாகமம் 26:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். அதனை அபிமெலேக்கு ஆண்டு வந்தான். அவன் பெலிஸ்திய ஜனங்களின் ராஜா. கர்த்தர் ஈசாக்கின் முன்பு தோன்றி, “நீ எகிப்துக்குப் போக வேண்டாம். நான் எங்கே உன்னை வசிக்கச் சொல்கிறேனோ அங்கே இரு. நான் உன்னோடு இருப்பேன். உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் வாரிசுகளுக்கும் இந்தப் பகுதியைத் தருவேன். உன் தந்தையான ஆபிரகாமுக்குச் செய்த வாக்கின்படி உனக்குத் தருவேன். வானத்து நட்சத்திரங்ளைப் போன்று உன் குடும்பத்தைப் பெருகச் செய்வேன். இந்த நிலப்பகுதிகளையெல்லாம் உன் குடும்பத்தாருக்கே தருவேன். உன் சந்ததிகள் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் ஆசீர்வதிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் உன் தந்தை எனக்குக் கீழ்ப்படிந்து நான் சொன்னபடி நடந்தான். எனது ஆணைகள், சட்டங்கள், விதிகள் அனைத்துக்கும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான்” என்றார். ஆகவே, ஈசாக்கு கேராரிலியே தங்கினான்.
ஆதியாகமம் 26:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.