ஆதியாகமம் 25:29-34
ஆதியாகமம் 25:29-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா காட்டு வெளியிலிருந்து மிகவும் களைத்தவனாக வந்தான். அப்பொழுது அவன் யாக்கோபிடம், “நான் களைத்துப் போயிருக்கிறேன்! சீக்கிரமாய் அந்தச் சிவப்புக் கூழில் எனக்குக் கொஞ்சம் தா!” என்று கேட்டான். அதினாலேயே ஏசாவுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டாயிற்று. யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான். அதற்கு ஏசா, “என்னைப் பார், நான் சாகப்போகிறேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான். ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான். அதன்பின் யாக்கோபு ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், பயற்றங்கூழும் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை உதாசீனம் செய்தான்.
ஆதியாகமம் 25:29-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன்” என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது. அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான். அதற்கு ஏசா: “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு” என்றான். அப்பொழுது யாக்கோபு: “இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயிற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.
ஆதியாகமம் 25:29-34 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.) ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் குமாரன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான். ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான். ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.
ஆதியாகமம் 25:29-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.