ஆதியாகமம் 25:1-34

ஆதியாகமம் 25:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவள் ஆபிரகாமுக்குச் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்களைப் பெற்றாள். யக்க்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தகப்பன். தேதானின் சந்ததிகள் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோர். ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா என்பவர்கள் மீதியானின் மகன்கள். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள். ஆபிரகாம் தனக்குரிய யாவற்றையும் ஈசாக்கிற்குக் கொடுத்தான். ஆனால் அவன் உயிரோடிருக்கும்போதே, ஆபிரகாம் தன் வைப்பாட்டிகளின் மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்து, தன் மகன் ஈசாக்கிடமிருந்து விலக்கி, அவர்களைக் கிழக்கு நாட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தான். ஆபிரகாம் பூரண ஆயுசுள்ள கிழவனாய், நல்ல முதிர்வயதில் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மயேலும் ஏத்தியனான சோகாரின் மகன் எப்ரோனின் வயலில், மம்ரேக்கு அருகேயுள்ள மக்பேலா எனப்படும் குகையில் அவனை அடக்கம்பண்ணினார்கள். அந்த வயலை ஆபிரகாம் ஏத்தியரிடமிருந்து வாங்கியிருந்தான். அங்கே ஆபிரகாம் அவன் மனைவி சாராளுடன் அடக்கம்பண்ணப்பட்டான். ஆபிரகாம் இறந்தபின் அவனுடைய மகன் ஈசாக்கை இறைவன் ஆசீர்வதித்தார். அப்போது அவன், பீர்லகாய்ரோயீ என்ற இடத்திற்கு அருகில் குடியிருந்தான். சாராளின் பணிப்பெண்ணான எகிப்தியப் பெண் ஆகார், ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் இஸ்மயேலின் வம்சவரலாறு இதுவே: பிறப்பின் வரிசைப்படி இஸ்மயேலின் மகன்களின் பெயர்களாவன: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன். பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா. ஆகியோரும் இஸ்மயேலின் மகன்களாவர். அவர்களுடைய குடியிருப்புகளின்படியும், முகாம்களின்படியும் பன்னிரண்டு கோத்திர ஆளுநர்களின் பெயர்களும் இவையே. இஸ்மயேல் நூற்று முப்பத்தேழு வருடங்கள் வாழ்ந்தான். அவன் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய சந்ததிகள் ஆவிலா தொடங்கி, சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். அது அசீரியாவுக்குப் போகிற வழியில் எகிப்தின் எல்லைக்கு அருகேயிருந்தது. அவர்கள் தங்கள் சகோதரர் எல்லோருடனும் பகைமையுடனேயே வாழ்ந்துவந்தார்கள். ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வம்சவரலாறு இதுவே: ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன் ஆனான். ஈசாக்கு ரெபெக்காளைத் திருமணம் செய்தபோது, நாற்பது வயதுடையவனாய் இருந்தான். ரெபெக்காள் பதான் அராமில் வாழ்ந்துவந்த அரமேயி தேசத்தானாகிய பெத்துயேலின் மகளும், லாபானின் சகோதரியுமாவாள். தன் மனைவி மலடியாய் இருந்தபடியால், ஈசாக்கு யெகோவாவிடத்தில் அவளுக்காக மன்றாடினான். யெகோவா அவன் மன்றாட்டைக் கேட்டார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பவதியானாள். அவள் வயிற்றிலிருந்த குழந்தைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்பொழுது அவள், “எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று சொல்லி, யெகோவாவிடம் விசாரிக்கப் போனாள். அப்பொழுது யெகோவா ரெபெக்காளிடம் சொன்னது: “உன் கர்ப்பத்தில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன; உன் வயிற்றிலிருந்து இரண்டு மக்கள் கூட்டங்கள் பிரிக்கப்படும். ஒரு மக்கள் கூட்டம் மற்றதைவிட வலிமையுள்ளதாய் இருக்கும், மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்.” பிரசவகாலம் வந்தபோது, அவள் கருப்பையில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. முதலில் பிறந்த குழந்தை சிவந்த நிறமும், அதன் முழு உடலும் உரோமம் நிறைந்ததாயும் இருந்தது. ஆகவே அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். அதன்பின் அவனுடைய சகோதரன், தன் கையினால் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அதனால் அவன் யாக்கோபு என்று பெயரிடப்பட்டான். ரெபெக்காள் இவர்களைப் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதுடையவனாயிருந்தான். அச்சிறுவர்கள் வளர்ந்தபோது, ஏசா வேட்டையில் திறமையுள்ளவனாயும், காடுகளில் தங்குபவனாயும் இருந்தான். ஆனால் யாக்கோபோ, பண்புள்ளவனாய் கூடாரங்கள் மத்தியில் வாழ்ந்தான். வேட்டையாடும் இறைச்சியை விரும்பிய ஈசாக்கு, ஏசாவை நேசித்தான். ஆனால் ரெபெக்காளோ யாக்கோபை நேசித்தாள். ஒரு நாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா காட்டு வெளியிலிருந்து மிகவும் களைத்தவனாக வந்தான். அப்பொழுது அவன் யாக்கோபிடம், “நான் களைத்துப் போயிருக்கிறேன்! சீக்கிரமாய் அந்தச் சிவப்புக் கூழில் எனக்குக் கொஞ்சம் தா!” என்று கேட்டான். அதினாலேயே ஏசாவுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டாயிற்று. யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான். அதற்கு ஏசா, “என்னைப் பார், நான் சாகப்போகிறேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான். ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான். அதன்பின் யாக்கோபு ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், பயற்றங்கூழும் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை உதாசீனம் செய்தான்.

ஆதியாகமம் 25:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான். அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள். யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றெடுத்தான்; தேதானுடைய மகன்கள் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். மீதியானுடைய மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் பிள்ளைகள். ஆபிரகாம் தனக்கு உண்டான அனைத்தையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் மகனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்த்தேசத்திற்கு அனுப்பிவிட்டான். ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள். அதற்குப்பின்பு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் இறந்து, தன் இனத்தாருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள். அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆபிரகாம் இறந்தபின்பு தேவன் அவனுடைய மகனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் கிணற்றுக்குச் சமீபமாக ஈசாக்கு குடியிருந்தான். சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: பற்பல சந்ததிகளாகப் பிரிந்த இஸ்மவேலின் மகன்களுடைய பெயர்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே. இஸ்மவேலின் வயது 137. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவர்கள் ஆவிலா துவங்கி எகிப்திற்கு நேராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். இது அவனுடைய சகோதரர்கள் எல்லோருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி. ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான். ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது 40 வயதாயிருந்தான்; இவள் பதான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்தான்; யெகோவா அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்; அவனுடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். அவளது கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: “இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ” என்று சொல்லி, யெகோவாவிடத்தில் விசாரிக்கப் போனாள். அதற்குக் யெகோவா: “இரண்டு இனத்தார்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார். பிரசவநேரம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோமத்தாலான அங்கியைப் போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான். இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான். ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள். ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன்” என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது. அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான். அதற்கு ஏசா: “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு” என்றான். அப்பொழுது யாக்கோபு: “இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயிற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.

ஆதியாகமம் 25:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான். தேதானுடைய சந்ததி அசூரீம், லெத்தூசீம், லெயூமீம், என்பவர்கள். மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள். ஆபிரகாம் மரிப்பதற்குமுன், அவன் தன் வேலைக்காரப் பெண்களின் பிள்ளைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து கிழக்கு நாடுகளுக்கு ஈசாக்கை விட்டு அப்பால் அவர்களை அனுப்பி வைத்தான். பின் ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு உரிமையாக்கினான். ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது. அதனால் அவன் மெலிந்து பலவீனமாகி மரணமடைந்தான். அவன் ஒரு நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் தனது பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். அவனது குமாரர்களான ஈசாக்கும் இஸ்மவேலும் அவனை மக்பேலா குகையிலே அடக்கம் செய்தனர். அந்தக் குகை எப்பெரோனின் வயலில் இருந்தது. எப்பெரோன் சோகாரின் குமாரன். அந்த இடம் மம்ரேக்குக் கிழக்கே இருந்தது. இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர். ஆபிரகாம் மரித்துப் போனபின் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கு தொடர்ந்து பெயர்லகாய்ரோயியில் வாழ்ந்து வந்தான். பின்வருவது இஸ்மவேலின் குடும்பப் பட்டியல்: இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆகார் சாராளின் எகிப்தியப் பணிப்பெண்.) இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தகுமாரன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம். மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள் பிறந்தார்கள். இவை அனைத்தும் இஸ்மவேலின் ஜனங்களின் பெயர்கள் ஆகும். ஒவ்வொரு குமாரனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு ராஜகுமாரர்களைப்போல வாழ்ந்தனர். இஸ்மவேல் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். பின் அவன் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். இஸ்மவேலின் சந்ததிகள் பாலைவனப் பகுதி முழுவதும் பரவி குடியேறினார்கள். அப்பகுதி ஆவிலா முதல் சூர் வரை இருந்தது. சூர் எகிப்துக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து அசிரியா வரை பரவிற்று. இஸ்மவேலின் சந்ததிகள் அவ்வப்போது அவனுடைய சகோதரர்களின் ஜனங்களைத் தாக்கினார்கள். இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன். ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் குமாரத்தி. லாபானுக்குச் சகோதரி. ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார். அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். அதற்கு கர்த்தர், “உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன. இரண்டு குடும்பங்களின் ராஜாக்கள் உனக்குப் பிறப்பார்கள். அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான். மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார். சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது. பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள். ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.) ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் குமாரன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான். ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான். ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.

ஆதியாகமம் 25:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்‌ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். யக்‌ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள். ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள். ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான். சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி. ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான். இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். ஏசா வேட்டையாடிக் கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள். ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.