ஆதியாகமம் 24:27-67

ஆதியாகமம் 24:27-67 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான். அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள். ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான். லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான். அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான். இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.” யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார். என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார். என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது. ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார். “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன். “அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய். நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார். “இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும். இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன். அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன். “இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன். “அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். “அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன். பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன். ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான். அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது. ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள். ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான். அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான். பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள். அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள். பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள். எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: “எங்கள் சகோதரியே, நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்வார்களாக.” பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான். ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான். ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள். அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள். வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான். ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது.

ஆதியாகமம் 24:27-67 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பயணம் செய்துவரும்போது, யெகோவா என் எஜமானுடைய சகோதரர்களுடைய வீட்டிற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார்” என்றான். அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தாள். ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான். அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன்: “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன்” என்றான். அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான். அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன். யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல், நீ என் தகப்பன் வீட்டிற்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கச் சொன்னார். அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு, அவர்: நான் ஆராதிக்கும் யெகோவா உன்னோடு தம்முடைய தூதனை அனுப்பி, உன் பயணத்தை வாய்க்கச் செய்வார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பாய். நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அவர்கள் உன்னோடு பெண்ணை அனுப்பாமல்போனாலும், நீ என் ஆணைக்கு உட்படாதிருப்பாய் என்றார். அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய யெகோவாவே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால், இதோ, நான் கிணற்றினருகில் நிற்கிறேன், தண்ணீர் இறைக்க வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது: “நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே யெகோவா என் எஜமானுடைய மகனுக்கு நியமித்த பெண்ணாகவேண்டும்” என்றேன். நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிப்பதற்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, கிணற்றில் இறங்கிப்போய்த் தண்ணீர் எடுத்தாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன். அவள் சீக்கிரமாகத் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் கொடுப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் கொடுத்தாள். அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு; தலைகுனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானனின் சகோதரனுடைய மகளை அவருடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள என்னை சரியானவழியில் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவவை ஸ்தோத்திரித்தேன். இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான். அப்பொழுது லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக: “இந்தக் காரியம் யெகோவாவால் வந்தது, உமக்கு நாங்கள் நன்மையோ அல்லது தீமையோ ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; யெகோவா சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும்” என்றார்கள். ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டான். பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான். பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: “என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்றான். அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், “பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம்” என்றார்கள். அதற்கு அவன்: “யெகோவா என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும்” என்றான். அப்பொழுது அவர்கள்: “பெண்ணை அழைத்து, அவளது விருப்பத்தைக் கேட்போம்” என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள். அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி, ரெபெக்காளை வாழ்த்தி: “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக” என்று ஆசீர்வதித்தார்கள். அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான். ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான். ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான். ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது, வேலைக்காரனை நோக்கி: “அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார்” என்று கேட்டாள். “அவர்தான் என் எஜமான்” என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான். அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

ஆதியாகமம் 24:27-67 பரிசுத்த பைபிள் (TAERV)

அவன், “எனது எஜமான் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவருக்கு கர்த்தர் கருணை காட்டி தமது உண்மையை நிரூபித்துள்ளார். என் எஜமானனின் குமாரனுக்கு ஏற்ற பெண்ணிடம் கர்த்தர் என்னை வழி நடத்திவிட்டார்” என்றான். பிறகு ரெபெக்காள் ஓடிப்போய் தன் குடும்பத்தாரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான். ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். பிறகு ஆபிரகாமின் வேலைக்காரனும் அவனது ஆட்களும் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். பிறகு அவனுக்கு உண்ண உணவு கொடுத்தான். ஆனால் வேலையாள் உண்ண மறுத்துவிட்டான், “நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு முன் உண்ணமாட்டேன்” என்றான். ஆகையால் லாபான், “பிறகு எங்களுக்குச் சொல்லும்” என்றான். வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன். கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன. சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார். என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் குமாரன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ளக் கூடாது. அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் குமாரனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார். அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன். உடனே அவர், ‘நான் கர்த்தருக்குச் சேவை செய்கிறேன். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உனக்கு உதவுவார். அங்கே எனது குடும்பத்தில் என் மகனுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடிப்பாய்’ என்று கூறினார். ஆனால் அவர்கள் என் குமாரனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார். “இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும். நான் இந்தக் கிணற்றருகில் ஒரு இளம் பெண்ணுக்காகக் காத்திருப்பேன். அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்பேன். பொருத்தமான பெண் எனில் சிறப்பான முறையில் சரியான பதிலைத் தருவாள். அவள், “இந்த தண்ணீரைக் குடியுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்” என்பாள். அதன் மூலம் இந்தப் பெண்ணே என் எஜமானின் குமாரனுக்கு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்று அறிவேன்’” என்று பிரார்த்தனை செய்தேன். “நான் வேண்டுதல்களை முடிக்கும் முன்னரே ரெபெக்காள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு வந்தாள். அவள் தோளில் குடத்தோடு வந்து தண்ணீரை நிரப்பினாள். நான் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். அவள் உடனே வேகமாகக் குடத்தை இறக்கி எனக்கு தண்ணீர் ஊற்றினதுடன், ‘இந்த தண்ணீரைக் குடியுங்கள். நான் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்றாள். எனவே நான் தண்ணீரைக் குடித்தேன். பிறகு அவள் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். பிறகு நான் ‘உனது தந்தை யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘என் தந்தை பெத்துவேல், அவர் நாகோருக்கும் மில்க்காளுக்கும் குமாரன்’ என்றாள். பிறகு அவளுக்கு நான் காதணிகளும் கடகங்களும் கொடுத்தேன். பின்னர் நான் குனிந்து கர்த்தருக்கு நன்றி சொன்னேன். என் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரைப் புகழ்ந்தேன். என்னைச் சரியான வழியில் நடத்தியதற்காக நான் நன்றி சொன்னேன். என் எஜமானனின் சகோதரரது பேத்தியையே தேவன் காட்டிவிட்டார். இப்போது சொல்லுங்கள். என் எஜமானன் மீது நீங்கள் கருணையும் நேசமும் வைத்து உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா? அல்லது உங்கள் பெண்ணைக் கொடுக்க மறுப்பீர்களா? சொல்லுங்கள். பின்னரே நான் செய்ய வேண்டியதை முடிவு செய்ய வேண்டும்” என்றான். லாபானும் பெத்துவேலும், “இது கர்த்தரிடமிருந்து வந்த காரியம் என உணர்கிறோம். ஆகையால் சொல்வதற்கு ஏதுமில்லை. இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் குமாரனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர். ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான். பின்னர் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையெல்லாம் ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவன் அழகான ஆடைகளையும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளையும் கொடுத்தான். அவன் ரெபெக்காளின் தாய், சகோதரன் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். பிறகு அவனும் அவனோடு வந்தவர்களும் அங்கே உண்டு இரவில் உறங்கினர். மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, “இப்போது நான் என் எஜமானனிடம் போக வேண்டும்” என்றனர். ரெபக்காளின் தாயும் சகோதரனும், “இவள் இன்னும் பத்து நாட்கள் எங்களோடு இருக்கட்டும். பிறகு அவளை அழைத்துப் போகலாம்” என்றனர். ஆனால் வேலையாளோ, “என்னைக் காத்திருக்கும்படி செய்யாதீர்கள். கர்த்தர் என் பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளார். இப்போது என் எஜமானனிடம் போகவிடுங்கள்” என்றான். “ரெபெக்காளின் தாயும் சகோதரனும், நாங்கள் ரெபெக்காளை அழைத்து அவளது விருப்பத்தை அறியவேண்டும்” என்றனர். அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?” என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள். எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள். அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து: “எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய். உனது சந்ததியார் தங்கள் பகைவரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்” என்றனர். பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான். ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் மாலை தியானம் செய்ய அவன் வயலுக்குச் சென்றான். அப்போது வெகு தூரத்திலிருந்து ஒட்டகங்கள் வருவதைப் பார்த்தான். ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள். அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் குமாரன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள். ஈசாக்கிடம் வேலைக்காரன் நடந்ததை எல்லாம் விபரமாகச் சொன்னான். பின் ஈசாக்கு அவளை அழைத்துக்கொண்டு அவனது தாயான சாராளின் கூடாரத்திற்குப் போனான். அன்று அவள் அவனது மனைவியானாள். ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.

ஆதியாகமம் 24:27-67 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான். அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள். ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையிலே இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான். அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான். அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார். அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு, அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய். நீ என் இனத்தாரிடத்துக்குப்போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார். அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே , என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால், இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது: நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன். நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன். அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள். அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு; தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன். இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான். அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள். ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரை மட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான். பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான். பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான். அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள். அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பி விடவேண்டும் என்றான். அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான். ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தான். ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான். அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.