ஆதியாகமம் 22:6-12

ஆதியாகமம் 22:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆபிரகாம் தகனபலிக்குரிய விறகுகளைத் தன் மகன் ஈசாக்கின்மேல் வைத்து, நெருப்பையும் கத்தியையும் தானே கொண்டுபோனான். அவர்கள் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது, ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமிடம், “அப்பா?” என்றான். ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “என்ன மகனே?” என்றான். “விறகும் நெருப்பும் இருக்கின்றன, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டி எங்கே?” என்று ஈசாக்கு கேட்டான். அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டியை இறைவனே நமக்குக் கொடுப்பார்” என்றான். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் இறைவன் குறித்த இடத்திற்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினான். அவன் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் கையை நீட்டி தன் மகனை வெட்டுவதற்குக் கத்தியை எடுத்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவனைக் கூப்பிட்டார். உடனே அவன், “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்தான். அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல், எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கிறவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆதியாகமம் 22:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”. அதற்கு ஆபிரகாம்: “என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார்” என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான். பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: “சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரே மகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்” என்றார்.

ஆதியாகமம் 22:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)

பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள். ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான். ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான். ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான். ஆபிரகாமும் அவனது குமாரனும் தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான். அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான். தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

ஆதியாகமம் 22:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.