ஆதியாகமம் 22:1-3

ஆதியாகமம் 22:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறிது காலத்தின்பின் இறைவன், ஆபிரகாமைச் சோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான். இறைவன் அவனிடம், “உன் மகனை, நீ நேசிக்கும் உன் ஒரே மகன் ஈசாக்கை, மோரியா பிரதேசத்திற்குக் கூட்டிக்கொண்டுபோ. அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகன காணிக்கையாகப் பலியிடு” என்றார். ஆபிரகாம் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, தன் கழுதைக்குச் சேணம் கட்டினான். அவன் தன் வேலைக்காரரில் இருவரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டுபோக ஆயத்தமானான். அதன்பின் தகனபலிக்கு வேண்டிய விறகுகளை வெட்டி எடுத்துக்கொண்டு, இறைவன் தனக்குக் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டான்.

ஆதியாகமம் 22:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

ஆதியாகமம் 22:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார். காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள்.

ஆதியாகமம் 22:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.