ஆதியாகமம் 21:1-21

ஆதியாகமம் 21:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா தாம் சொல்லியிருந்தபடியே, சாராளுக்குக் கருணை காட்டினார்; தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றினார். ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குப்பண்ணியிருந்த அந்த குறித்த காலத்திலேயே, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். சாராள் தனக்குப் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று ஆபிரகாம் பெயரிட்டான். தன் மகன் ஈசாக்குப் பிறந்த எட்டாம் நாளில், இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான். அப்பொழுது சாராள், “இறைவன் என்னைச் சிரிக்க வைத்தார், இதைக் கேட்கும் யாவரும் என்னுடன் சேர்ந்து சிரிப்பார்கள்; சாராள் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லியிருப்பார்? அப்படியிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள். அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடி மறந்தது. ஈசாக்கு பால் மறந்த நாளன்று ஆபிரகாம் ஒரு பெரிய விருந்து கொடுத்தான். ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள். தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, “பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள் சத்தமாய் அழத்தொடங்கினாள். இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் வளரும்போது இறைவன் அவனுடன் இருந்தார். அவன் பாலைவனத்தில் வசித்து, வில் வீரனானான். இஸ்மயேல் பாரான் பாலைவனத்தில் குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்தியப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள்.

ஆதியாகமம் 21:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான். அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.” “சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள். குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான். பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: “இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை” என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: “அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன்” என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள். தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு, “சிறுவன் தாகத்தினால் சாகிறதை நான் பார்க்கமாட்டேன்” என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.

ஆதியாகமம் 21:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் குமாரனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது. சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது. ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது. சாராள், “தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள். ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான். ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் குமாரனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் குமாரனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் குமாரன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள். இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் குமாரன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் குமாரனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் குமாரனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் குமாரன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள். கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் குமாரனை ஒரு புதரின் அடியில் விட்டாள். ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் குமாரன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார். பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் குமாரனுக்கும் குடிக்கக் கொடுத்தாள். அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனோடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டான். அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.

ஆதியாகமம் 21:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான், தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான். அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடகூட நகைப்பார்கள். சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள். பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான். பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.