ஆதியாகமம் 2:7-9
ஆதியாகமம் 2:7-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனாகிய யெகோவா நிலத்தின் மண்ணினால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசியில் உயிர்மூச்சை ஊதினார்; அப்பொழுது மனிதன் உயிருள்ளவனானான். இறைவனாகிய யெகோவா, கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடியமர்த்தினார். இறைவனாகிய யெகோவா பார்வைக்கு இனியதும் உணவுக்கு ஏற்றதுமான எல்லா வகையான மரங்களையும் அத்தோட்டத்தில் வளரச்செய்தார். தோட்டத்தின் நடுவில் வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன.
ஆதியாகமம் 2:7-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான். தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
ஆதியாகமம் 2:7-9 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
ஆதியாகமம் 2:7-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.