ஆதியாகமம் 2:21-25

ஆதியாகமம் 2:21-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார். அப்பொழுது மனிதன் சொன்னான்: “இவள் என் எலும்பின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.” இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆதியாகமம் 2:21-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

ஆதியாகமம் 2:21-25 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது அவன், “இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி; அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை. அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது. அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள். அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான். அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர். மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆதியாகமம் 2:21-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.