ஆதியாகமம் 2:15-25

ஆதியாகமம் 2:15-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனாகிய யெகோவா, மனிதனைக் கொண்டுபோய், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார். பின்பு இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டு, “நீ தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் சாப்பிடலாம்; ஆனால் நீ நன்மை தீமையின் அறிவைத் தரும் மரத்திலிருந்து மட்டும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதிலிருந்து சாப்பிடும் நாளில் நிச்சயமாய் நீ சாகவே சாவாய்” என்று சொன்னார். பின்பு இறைவனாகிய யெகோவா, “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன்” என்றார். அப்பொழுது இறைவனாகிய யெகோவா எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார். மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படி அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. இவ்வாறு மனிதன் எல்லா வளர்ப்பு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். ஆனால் ஆதாமுக்கோ தகுந்த துணை இன்னமும் காணப்படவில்லை. எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார். அப்பொழுது மனிதன் சொன்னான்: “இவள் என் எலும்பின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.” இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆதியாகமம் 2:15-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார். பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார். தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது. அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

ஆதியாகமம் 2:15-25 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார். மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார். தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான். மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது அவன், “இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி; அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை. அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது. அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள். அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான். அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர். மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆதியாகமம் 2:15-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.