ஆதியாகமம் 18:9-14

ஆதியாகமம் 18:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களா யிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

ஆதியாகமம் 18:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள். “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள். எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள். அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’ யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.

ஆதியாகமம் 18:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: “ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாகக் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள். அப்பொழுது யெகோவா ஆபிரகாமை நோக்கி: “சாராள், நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன? யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.

ஆதியாகமம் 18:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார். சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள். எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள். கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார்.