ஆதியாகமம் 17:1-9

ஆதியாகமம் 17:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு. நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார். ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி, “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய். நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள். நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன். நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார். அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆதியாகமம் 17:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன்” என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி: “நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய். இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும். உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன். நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார். பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

ஆதியாகமம் 17:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார். தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார். மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஆதியாகமம் 17:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.