ஆதியாகமம் 16:11-13

ஆதியாகமம் 16:11-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 16:11-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது: “நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய், உனக்கு ஒரு மகன் பிறப்பான். நீ அவனுக்கு இஸ்மயேல் என்று பெயரிட வேண்டும். ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார். அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்; அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.” அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 16:11-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவாவுடைய தூதனானவர் அவளை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; யெகோவா உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக. அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான்” என்றார். அப்பொழுது அவள்: “என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின யெகோவாவுக்கு நீர் என்னைக்காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 16:11-13 பரிசுத்த பைபிள் (TAERV)

மேலும் கர்த்தருடைய தூதன், “ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய். உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் குமாரன் உனக்கு உதவுவான். இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும், சுதந்திரமானவனாகவும் இருப்பான். அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான். ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள். அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான். அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான். கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள்.