ஆதியாகமம் 16:1-4
ஆதியாகமம் 16:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்; எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள். ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான். எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள். ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள். தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள்.
ஆதியாகமம் 16:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குக் குழந்தையில்லாமல் இருந்தது. எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். சாராய் ஆபிராமை நோக்கி: “நான் குழந்தைபெறாமலிருக்கக் யெகோவா என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடு சேரும், ஒருவேளை அவளால் என்னுடைய குடும்பம் கட்டப்படும்” என்றாள். சாராயின் வார்த்தையின்படி ஆபிராம் செய்தான். ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாருடன் இணைந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள், தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் எஜமானியை அற்பமாக நினைத்தாள்.
ஆதியாகமம் 16:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான். இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள்.
ஆதியாகமம் 16:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.