ஆதியாகமம் 15:13-21

ஆதியாகமம் 15:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவ்வேளையில் யெகோவா ஆபிராமிடம், “நீ நன்கு அறிந்துகொள்: உன் சந்ததிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள், அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்; அதன்பின் அவர்கள் அதிக உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறுவார்கள். நீயோ, மன சமாதானத்துடன் உன் முன்னோருடன் சேருவாய், முதிர்வயதில் இறந்து அடக்கம்பண்ணப்படுவாய். உன் சந்ததிகள் நான்காம் தலைமுறையில் மறுபடியும் இங்கே திரும்பி வருவார்கள்; ஏனெனில், எமோரியருடைய பாவம் இன்னும் முழு அளவை அடையவில்லை” என்றார். சூரியன் மறைந்து இருள் உண்டானபோது, எரிகின்ற தீப்பந்தமும், புகையும் நெருப்பு ஜாடியும் தோன்றி, வெட்டிவைத்த துண்டுகளிடையே சென்றது. அந்நாளிலே யெகோவா ஆபிராமுடன் ஒரு உடன்படிக்கை செய்து, “எகிப்தின் நதிக்கும் ஐபிராத்து நதிக்கும் இடையிலுள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர் ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் என்பவர்களின் நாட்டை உன் சந்ததிக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

ஆதியாகமம் 15:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய். நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார். சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின. அந்த நாளிலே யெகோவா ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, “எகிப்தின் நதிதுவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன்” என்றார்.

ஆதியாகமம் 15:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள். ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள். “நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார். சூரியன் அஸ்தமித்தபின் மேலும் இருளாயிற்று. மரித்துப்போன மிருகங்கள் தரையின் மேலேயே கிடந்தன. இரண்டு துண்டுகளாகக் கிடந்த அவற்றின் உடலிலிருந்து சூளையின் புகையும் நெருப்பும் வெளிவந்தன. ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

ஆதியாகமம் 15:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடைய தல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.