ஆதியாகமம் 15:1-8

ஆதியாகமம் 15:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குபின் ஒரு தரிசனத்தில் யெகோவாவின் வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “ஆபிராமே, பயப்படாதே. நானே உன் கேடயம், நானே உன் மகா பெரிய வெகுமதி.” அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?” பின்னும் ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லையே; ஆதலால், என் வீட்டு வேலைக்காரன் என் வாரிசாகப் போகிறான்” என்றான். அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார். பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார். ஆபிராம் யெகோவாவை விசுவாசித்தான், அந்த விசுவாசத்தை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார். அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான்.

ஆதியாகமம் 15:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார். அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான். பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார். அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார். பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார். அதற்கு அவன்: “யெகோவா ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.

ஆதியாகமம் 15:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார். ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். மேலும் ஆபிராம், “நீர் எனக்கு குமாரனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான். கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு குமாரன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார். பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார். ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார். ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.

ஆதியாகமம் 15:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.