ஆதியாகமம் 15:1-12

ஆதியாகமம் 15:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குபின் ஒரு தரிசனத்தில் யெகோவாவின் வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “ஆபிராமே, பயப்படாதே. நானே உன் கேடயம், நானே உன் மகா பெரிய வெகுமதி.” அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?” பின்னும் ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லையே; ஆதலால், என் வீட்டு வேலைக்காரன் என் வாரிசாகப் போகிறான்” என்றான். அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார். பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார். ஆபிராம் யெகோவாவை விசுவாசித்தான், அந்த விசுவாசத்தை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார். அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான். யெகோவா அவனிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார். அப்பொழுது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அவைகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்குபடுத்தி வைத்தான்; பறவைகளையோ அவன் இரண்டாக வெட்டவில்லை. அப்பொழுது மாமிசம் தின்னிப் பறவைகள், வெட்டி வைத்த உடல்களை உண்பதற்கு இறங்கின, ஆபிராம் அவைகளைத் துரத்திவிட்டான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும்போது, ஆபிராம் ஆழ்ந்த நித்திரை அடைந்தான்; பயங்கரமான காரிருள் அவனை மூடிக்கொண்டது.

ஆதியாகமம் 15:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார். அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான். பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார். அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார். பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார். அதற்கு அவன்: “யெகோவா ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். அதற்கு அவர்: “மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா” என்றார். அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.

ஆதியாகமம் 15:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார். ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். மேலும் ஆபிராம், “நீர் எனக்கு குமாரனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான். கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு குமாரன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார். பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார். ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார். ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான். தேவன் ஆபிராமிடம், “நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம், மூன்று ஆண்டுகள் ஆன ஒரு பசுவை கொண்டு வா. அதோடு மூன்று ஆண்டுகள் ஆன ஆட்டையும், ஆட்டுக்கடாவையும், கொண்டு வா, அதோடு ஒரு காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் என்னிடம் கொண்டு வா” என்றார். ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை. பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியபோது ஆபிராமுக்குத் தூக்கம் வந்தது. அத்துடன் அச்சுறுத்தும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது.

ஆதியாகமம் 15:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். அதற்கு அவர்: மூன்றுவயதுக் கிடாரியையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.