ஆதியாகமம் 12:10-20

ஆதியாகமம் 12:10-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான். பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம் 12:10-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில், அந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிலகாலம் எகிப்தில் குடியிருப்பதற்காகப் போனான். அவன் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “நீ மிகவும் அழகிய பெண் என்பது எனக்குத் தெரியும். எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, என்னைக் கொன்றுவிடுவார்கள் ஆனால் உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள். அதனால் நீ, உன்னை என் சகோதரி என்று சொல், அப்பொழுது அவர்கள் உனக்காக என்னை நன்றாக நடத்துவார்கள்; நானும் உன் நிமித்தம் உயிர் தப்புவேன்” என்றான். ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள். பார்வோனின் அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பார்வோன் சாராயின் நிமித்தம் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் பெற்றுக்கொண்டான். ஆனால் யெகோவா ஆபிராமின் மனைவி சாராயின் நிமித்தம், பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொடிய வியாதியால் தாக்கினார். அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, “நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை? ‘இவள் என் சகோதரி’ என்று ஏன் எனக்குச் சொன்னாய்? அதனால் அல்லவா அவளை என் மனைவியாக்கிக் கொள்ளும்படி எடுத்தேன்? இதோ, உன் மனைவி; அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்றான். பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன் வேலைக்காரருக்கு கட்டளையிட்டான், அவர்கள் அவனை அவன் மனைவியுடனும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் அவனை நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம் 12:10-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானது; தேசத்திலே பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்குவதற்காக அந்த இடத்திற்குப் போனான். அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: “நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும். எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல்” என்றான். ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, எகிப்தியர்கள் அந்தப் பெண்ணை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்தப் பெண் பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் யெகோவா தேவன் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார். அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: “நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன? இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ” என்று சொன்னான். பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம் 12:10-20 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான். தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும். எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள். அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான். எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர். சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான். பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார். எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல், அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான். பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.