ஆதியாகமம் 12:1-9

ஆதியாகமம் 12:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா ஆபிராமிடம் சொன்னார்: “நீ உன் நாட்டையும், உன் உறவினரையும், உன் தகப்பன் குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ. “நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன், உன்னை ஆசீர்வதிப்பேன்; உன் பெயரை மேன்மைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன். பூமியின் எல்லா மக்கள் கூட்டங்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.” யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. ஆபிராம் தன் மனைவி சாராய், தன் சகோதரனின் மகன் லோத்து, ஆரான் நாட்டில் தாங்கள் சம்பாதித்தவைகள், தங்களுடன் இருந்த வேலைக்காரர்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு கானான் நாட்டிற்குப் போகப் புறப்பட்டு, அங்கு போய்ச்சேர்ந்தார்கள். ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது கானானியர் அங்கே வசித்தார்கள். யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன் சந்ததிக்கு நான் இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் அங்கிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயுள்ள மலைப்பக்கமாய்ப் போய், பெத்தேல் மேற்கிலும், ஆயி கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தான். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கிச் சென்றான்.

ஆதியாகமம் 12:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, 75 வயதுள்ளவனாக இருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், ஆரானிலே வாங்கியிருந்த மக்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தைச் சென்றடைந்தார்கள். ஆபிராம் அந்த தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள மோரே என்னும் சமபூமிவரைக்கும் வந்தான்; அந்தக் காலத்திலே கானானியர்கள் அந்த தேசத்தில் இருந்தார்கள். யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். அதற்குப் பிறகு ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பயணம் செய்தான்.

ஆதியாகமம் 12:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் ஆபிராமிடம், “நீ உனது ஜனங்களையும், நாட்டையும், தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ. நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர். உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன். உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன். நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார். எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர். ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர். கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான்.

ஆதியாகமம் 12:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்பு அவன் அவ்விடம்விட்டுப்பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.