ஆதியாகமம் 11:26-32

ஆதியாகமம் 11:26-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான். தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான். ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன். சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள். தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.

ஆதியாகமம் 11:26-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான். தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான். ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான். ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள். தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள். தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.

ஆதியாகமம் 11:26-32 பரிசுத்த பைபிள் (TAERV)

தேராகுக்கு 70 வயதானபோது அவனது குமாரர்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள். இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன். ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில் மரணமடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான். ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய குமாரத்தி. ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை. சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள். தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது குமாரன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர். தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.

ஆதியாகமம் 11:26-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான். ஆரான் தன் ஜன்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான். ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.