ஆதியாகமம் 11:1-26
ஆதியாகமம் 11:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார். முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார். சேமின் வம்சவரலாறு இதுவே: பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான். அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான். சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான். ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான். பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான். ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான். செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான். நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான். தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார். சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 11:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)
வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர். மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர். கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார். இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் குமாரன் பிறந்தான். அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர். அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் குமாரன் பிறந்தான். சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான். ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான். பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது குமாரன் ரெகூ பிறந்தான். ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது குமாரன் செரூகைப் பெற்றான். செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான். நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது குமாரன் தேராகைப் பெற்றான். தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர். தேராகுக்கு 70 வயதானபோது அவனது குமாரர்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.
ஆதியாகமம் 11:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார். சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.