ஆதியாகமம் 1:24-31
ஆதியாகமம் 1:24-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:24-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார். அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார். அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும். பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:24-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
ஆதியாகமம் 1:24-31 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது. இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார். அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார். எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார். மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.