ஆதியாகமம் 1:1-26

ஆதியாகமம் 1:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று. ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும், அவை பூமிக்கு ஒளி கொடுக்கும்படி, வானவெளியில் ஒளிச்சுடர்களாய் இருக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். இறைவன் அவற்றைப் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வானவெளியில் வைத்தார். பகலையும் இரவையும் ஆளுவதற்காகவும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதற்காகவும் அவற்றை வைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் பெரிய கடல் விலங்குகளையும், நீரில் நீந்தி வாழும் எல்லா உயிரினங்களையும் அவற்றின் வகைகளின்படியும், சிறகுள்ள எல்லா பறவைகளையும் அதினதின் வகைகளின்படியும் படைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார். அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார்.

ஆதியாகமம் 1:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார். “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.

ஆதியாகமம் 1:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று. பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும். பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார். பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று. பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும். இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார். தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார். இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள். பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று. பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது. இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார். அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.

ஆதியாகமம் 1:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும். பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

ஆதியாகமம் 1:1-26

ஆதியாகமம் 1:1-26 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்