கலாத்தியர் 5:3-12

கலாத்தியர் 5:3-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் மீண்டும் சொல்கிறேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும், மோசேயின் சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான். மோசேயின் சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட முயற்சிக்கிற நீங்கள் கிறிஸ்துவிலிருந்து விலகிவிட்டீர்கள்; நீங்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்கள். ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் கிறிஸ்து இயேசுவில் ஒருவன் விருத்தசேதனத்தைச் செய்துகொண்டானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அன்பின் செயல்களினால் வெளிக்காட்டப்படுகிற விசுவாசம் மட்டுமே முக்கியமானது. இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக்கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடைசெய்தது யார்? இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல. “ஒரு சிறிதளவு புளித்தமாவு பிசைந்தமாவு முழுவதையும் புளிப்பூட்டுகிறதே.” நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் உங்களைக்குறித்து கர்த்தரில் மனவுறுதி கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கிறவன் எவனோ, அவன் யாராயிருந்தாலும் தண்டனையைப் பெறுவான். பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியம்தான் என்று நான் இன்னும் பிரசங்கித்தால், நான் ஏன் இன்னும் யூதர்களால் துன்புறுத்தப்படுகிறேன்? அப்படி நான் பிரசங்கிப்பது உண்மை என்றால், கிறிஸ்துவின் சிலுவையின் காரணமாய் வரும் துன்புறுத்தல் நின்று போயிருக்குமே. விருத்தசேதனம் அவசியம் என்று உங்களைக் குழப்பமடையச் செய்கிறவர்களோ, இன்னும்கூட தங்கள் முழு உறுப்பையுமே வெட்டிக்கொள்வதையே நான் விரும்புகிறேன்.

கலாத்தியர் 5:3-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன். நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள். நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும். நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை. புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும். நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான். சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.

கலாத்தியர் 5:3-12 பரிசுத்த பைபிள் (TAERV)

மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும். சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள். ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம். ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது. பந்தயத்தில் நீங்கள் நன்றாக ஓடினீர்கள். நீங்கள் உண்மைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். ஆனால் இப்போது உண்மையின் வழியில் இருந்து உங்களைத் தடுத்தது யார்? உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை. கவனமாய் இருங்கள். “புளிப்புள்ள மிகச் சிறிதளவு மாவுகூட பிசைந்த மாவு எல்லாவற்றையும் புளிக்கும்படிச் செய்துவிடும்.” (மிகச் சிறிதான ஒன்றுகூட பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.) வேறுவிதமாக நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள் என்று தேவனுக்குள் நான் நம்பிக்கையாய் இருக்கிறேன். சிலர் வேறு விதமாக உங்களைக் குழப்புகிறார்கள். அவ்வாறு குழப்புகிறவன் எவனாக இருந்தாலும் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான். சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும். உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் அவர்கள் விருத்தசேதனத்துடன் துண்டித்துக்கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.

கலாத்தியர் 5:3-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும், நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான். சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.