கலாத்தியர் 4:12-26
கலாத்தியர் 4:12-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள். நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில், இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன். உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள், ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
கலாத்தியர் 4:12-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன். அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன். சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா? இப்பொழுது சிலர் உங்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே, ஆனால் அவர்களுடைய நோக்கங்களோ நல்லவை அல்ல. அவர்கள் எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்களும் அவர்கள் சார்பாய் இருப்பதையே விரும்புகிறார்கள். நோக்கம் நல்லதென்றால், அதில் தீவிர ஆர்வம் காண்பிப்பது நல்லதுதான். அவ்வித ஆர்வத்தை உங்களுடன் நான் இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே காண்பிக்கவேண்டும். என் பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். இப்பொழுது உங்களுடனே நான் இருக்கவும், உங்களுடன் வேறுவிதமாய்ப் பேசவும் எவ்வளவாய் விரும்புகிறேன். ஏனெனில், உங்களைக்குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன். மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள். ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே. அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான். இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது. அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே. ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய்.
கலாத்தியர் 4:12-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ? அவர்கள் வைராக்கியத்தோடு உங்களைத் தேடுகிறார்கள்; ஆனாலும் நல்லமனதோடு அப்படிச் செய்யாமல், நீங்கள் என்னைவிட்டுவிட்டு, அவர்களை வைராக்கியத்தோடு பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்லக் காரியத்திற்காக, நான் உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமில்லை, எப்பொழுதும் வைராக்கியம் கொள்வது நல்லதுதான். என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள். ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன். அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.
கலாத்தியர் 4:12-26 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா? அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள். நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். என் சிறு பிள்ளைகளே, மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள். சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். அடிமைப் பெண்ணின் குமாரன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன். இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய்.