கலாத்தியர் 4:12-16

கலாத்தியர் 4:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?

கலாத்தியர் 4:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன். அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன். சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா?

கலாத்தியர் 4:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ?

கலாத்தியர் 4:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?