கலாத்தியர் 4:1-7
கலாத்தியர் 4:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
கலாத்தியர் 4:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும். அவனுடைய தகப்பன் நியமித்த காலம் வரும்வரைக்கும் அவன் பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்குக் கீழ்ப்பட்டே இருக்கிறான். இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார். இறைவன் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளுக்குரிய முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து அனுப்பப்பட்டார். நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே!” என்று கூப்பிடத்தக்க இறைவன் தமது மகனுடைய ஆவியை, உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார். ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார்.
கலாத்தியர் 4:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் இந்த உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தோம். நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, பெண்ணிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார். ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.
கலாத்தியர் 4:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் குமாரனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் குமாரனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.