கலாத்தியர் 3:19-25
கலாத்தியர் 3:19-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்படியானால், மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மீறுதல்களை எடுத்துக்காட்டவே வாக்குத்தத்தத்தால் குறிப்பிடப்பட்ட அந்த ஆபிரகாமின் சந்ததியானவர் வரும்வரைக்கும் மோசேயின் சட்டம் நீட்டிக்கப்பட்டது. இறைவன் மோசேயை நடுவராக வைத்து, இறைத்தூதர்கள் மூலமாய் மோசேயின் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே. அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும். ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வருவதற்கு முன்னதாக, நாம் மோசேயின் சட்டத்தினால் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். நாம் விசுவாசம் வெளிப்படும் வரைக்குமே, இப்படி இருந்தோம். அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது. இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை.
கலாத்தியர் 3:19-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
கலாத்தியர் 3:19-25 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்படியென்றால் சட்டங்களின் நோக்கம் என்ன? அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. ஆபிரகாமின் சிறப்பான வாரிசு வரும்வரை இச்சட்டம் தொடர்ந்து பயன்பட்டது. தேவன் இந்த வாரிசைப் பற்றியே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இச்சட்டங்கள் தேவ தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டது. தேவ தூதர்கள் மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்களை மனிதர்களுக்கு வழங்கினர். மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார். இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு சட்டம் இருந்தால் பிறகு நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும். ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும். இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது. எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.
கலாத்தியர் 3:19-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.