கலாத்தியர் 2:1-10

கலாத்தியர் 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பதினான்கு வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் பர்னபாவுடன் எருசலேமுக்குப் போனேன். நான் தீத்துவையும் என்னுடனே கூட்டிக்கொண்டு போனேன். நான் பெற்றுக்கொண்ட ஒரு வெளிப்பாட்டின்படிதான், அங்கு நான் போனேன். அங்கே யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியைப் பற்றி, அவர்களுக்கு விவரமாகக் கூறினேன். தலைவர்களாகக் காணப்பட்டவர்களுடன் தனிப்பட்ட விதத்திலேயே நான் எடுத்துரைத்தேன். ஏனெனில் நான் செய்த ஊழியமும், செய்கின்ற ஊழியமும் பயனற்றதாகி விடக்கூடாது என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் என்னுடன் இருந்த தீத்து ஒரு கிரேக்கனாயிருந்தபோதுங்கூட, அவன் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால் இது ஒரு பிரச்சனையாக எழுந்தது. ஏனெனில், சில பொய்யான சகோதரர்களும் சபைக்குள் புகுந்துகொண்டு கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் அனுபவித்த சுதந்திரத்தை அவர்கள் உளவுபார்த்து எங்களை அடிமைகளாக்கவே வந்தார்கள். ஆனால் நற்செய்தியின் சத்தியம் எப்பொழுதும் உங்களுடன் நிலைத்திருக்கும்படியாக, நாங்கள் அவர்களுக்குச் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. அங்கு முக்கியமானவர்களாய் கருதப்பட்டவர்கள்கூட என்னுடைய செய்தியுடன் வேறு ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை. இறைவன் ஆள்பார்த்து மதிப்பிடுகிறவர் அல்ல. யூதர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் பணி பேதுருவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதுபோல, யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி, எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறதை சபையின் தலைவர்கள் கண்டார்கள். ஏனெனில் யூதர்களுக்கு பேதுருவின் அப்போஸ்தல ஊழியத்தின் மூலமாக செயலாற்றிய இறைவன், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனான என் ஊழியத்தின் மூலமும் செயலாற்றினார். இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் எனக்கும், பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து ஐக்கியம் பாராட்டினார்கள். நானும் பர்னபாவும் யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும், அவர்களோ யூதமக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஏழைகளையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம், எங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். உண்மையில் அவ்விதமாகவே செய்யவேண்டும் என்றே நானும் ஆவலாயிருந்தேன்.

கலாத்தியர் 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன். நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன். ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை. கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது. நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே. அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து; எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து, ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.

கலாத்தியர் 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன். தேவன் எனக்குக் கட்டளை இட்டபடியும் வழி காட்டியபடியும் நான் விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன். நாங்கள் தனிமையில் இருக்கும்போது யூதர் அல்லாதவர்களிடம் நான் போதிக்கும் நற்செய்தியை அவர்களிடம் சொன்னேன். எனது பணியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இதனால் நான் ஏற்கெனவே செய்தவையும் இப்பொழுது செய்துகொண்டிருப்பதுவும் வீணாகாமல் இருக்கும். என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சில போலிச் சகோதரர்கள் இரகசியமாய் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒற்றர்களைப்போல இருந்தனர். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டான சுதந்தரத்தை அவர்கள் அறிய விரும்பினர். ஆனால் அந்த போலிச் சகோதரர்கள் விருப்பப்படி நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து நற்செய்தியின் முழு உண்மை உங்களோடு இருப்பதையே நாங்கள் விரும்பினோம். மிக முக்கியமாய்க் கருதப்பட்ட அந்த மனிதர்கள் நான் பிரசங்கம் செய்த நற்செய்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர்கள் “முக்கியமானவர்களா” இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை. தேவனுக்கு முன்னால் அனைவரும் சமம்தானே. அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.

கலாத்தியர் 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன். நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று. சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால். விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு; எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.