கலாத்தியர் 1:9-20
கலாத்தியர் 1:9-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாங்கள் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறது போலவே, இப்பொழுதும் நான் மீண்டும் சொல்லுகிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியை யாராவது உங்களுக்கு அறிவித்தால், அவன்மேல் இறைவனுடைய சாபம் சுமரட்டும். நான் இப்பொழுது மனிதருடைய அங்கீகாரத்தையோ அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையோ பெற முயல்கிறேனா? அல்லது மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறேனா? நான் மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கமுடியாதே. பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, எந்த ஒரு மனிதனும் அதை எனக்குக் போதிக்கவும் இல்லை. இயேசுகிறிஸ்து எனக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன். முன்பு யூதமதத்தில் இருந்தபோது, நான் வாழ்ந்த முறையைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் எவ்வளவு கொடுமையாய் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்தி, அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்போது என்னுடைய சமகாலத்து யூதர்களைவிட, நானே யூத மதக் கோட்பாடுகளில் முன்னேறியவனாய் இருந்தேன். நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதில் தீவிர ஆர்வம் உடையவனாய் இருந்தேன். ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறுபிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து, கிறிஸ்துவை என்னில் வெளிப்படுத்த பிரியங்கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காக இறைவனே இப்படிச் செய்தார், அப்பொழுது அது குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை, எனக்கு முன்னமே அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திக்கும்படி, நான் எருசலேமுக்குப் போனதுமில்லை. நானோ உடனே அரேபிய வனாந்திரத்திற்குப்போய், பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பிவந்தேன். மூன்று வருடங்களுக்குப் பின்புதான், நான் பேதுருவுடன் அறிமுகமாகும்படி, எருசலேமுக்குப் போய், அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன். மற்ற அப்போஸ்தலரில் ஒருவரையும் நான் சந்திக்கவில்லை. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபை மாத்திரமே சந்தித்தேன். நான் உங்களுக்கு இப்பொழுது எழுதுகிறது பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக நான் நிச்சயமாய் உங்களுக்குக் கூறுகிறேன்.
கலாத்தியர் 1:9-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே. மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 1:9-20 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது. சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார். நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும். ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும்.
கலாத்தியர் 1:9-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.