கலாத்தியர் 1:1-8
கலாத்தியர் 1:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பவுலாகிய நான் ஒரு மனிதனிடத்தில் இருந்தோ, அல்லது மனிதர்கள் மூலமாகவோ அல்ல, இயேசுகிறிஸ்துவின் மூலமாகவும், அவரை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய பிதாவாகிய இறைவனின் மூலமாகவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அப்படி அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும், என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும், கலாத்தியா நாட்டிலுள்ள திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, வேறு ஒரு நற்செய்தியின் பக்கமாகத் திரும்புகிறீர்களே. இதைக்குறித்து நான் வியப்படைகிறேன். உண்மையிலேயே அது எவ்விதத்திலும் நற்செய்தி அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச்செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, வேறு ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ, நாங்களோ அறிவித்தாலும், அவன் நித்தியமாகவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
கலாத்தியர் 1:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும், என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
கலாத்தியர் 1:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதாவது: நான் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர். இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது, பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென். கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.
கலாத்தியர் 1:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.