எஸ்றா 3:1-6

எஸ்றா 3:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பாபிலோனில் இருந்து திரும்பிய பிறகு இஸ்ரயேல் மக்கள் பட்டணங்களில் குடியேறிய ஏழாம் மாதத்தில், அவர்கள் எல்லோரும் எருசலேமில் ஒருமனப்பட்டு ஒன்றுகூடினார்கள். அப்பொழுது யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவனுடைய உடன் ஆசாரியரும், செயல்தியேலின் மகன் செருபாபேலும், அவனுடைய மனிதர்களும் சேர்ந்து இஸ்ரயேலின் இறைவனின் பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி, தகன காணிக்கைகளைப் பலியிடுவதற்காக பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த மக்களுக்குப் பயந்தபோதிலும் பலிபீடத்தை அதன் முந்திய அஸ்திபாரத்தில் கட்டினார்கள். உடனடியாக அவர்கள் காலை மாலை பலியாக யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைப் பலியிட்டார்கள். அதன்பின்பு சட்டத்தில் எழுதியுள்ளபடி அவர்கள் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு நாளும் நியமிக்கப்பட்ட தேவையான அளவு தகன காணிக்கைகளைச் செலுத்திவந்தார்கள். அதன்பின்பு அவர்கள் வழக்கமான தகன காணிக்கைகளையும், அமாவாசை காணிக்கைகளையும் நியமிக்கப்பட்ட யெகோவாவினுடைய பரிசுத்த பண்டிகைக்கான காணிக்கைகளையும் கொண்டுவந்து செலுத்தினார்கள். அத்துடன் யெகோவாவுக்கு சுயவிருப்பக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள். ஏழாம் மாதத்தின் முதலாம் நாளிலே கூடாரப்பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்பே, அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் யெகோவாவின் ஆலயத்திற்கு இன்னும் அஸ்திபாரம் போடப்படவில்லை.

எஸ்றா 3:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள். அப்பொழுது யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், அவனுடைய சகோதரர்களும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய யெகோவாவுக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள். எழுதியிருக்கிறமுறையில் அவர்கள் கூடாரப்பண்டிகையை அனுசரித்து, நித்திய நியமத்தின்முறையிலும் அன்றாடகக் கணக்கு வரிசையில் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள். அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், யெகோவாவுடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், யெகோவாவுக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள். ஏழாம் மாதம் முதல் தேதியில் யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.

எஸ்றா 3:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே ஏழாவது மாதத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் சேர்ந்திருந்தார்கள். அப்போது, எருசலேமில் அனைத்து ஜனங்களும் கூடினர். அவர்கள் அனைவரும் ஒரே இனமாகக் கூடினர். பிறகு யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவனுடனிருந்த ஆசாரியர்களும், செயல்தியேலின் குமாரனான செருபாபேலும், அவனது ஆட்களும் இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடம் கட்டினார்கள். அதன் மீது அவர்கள் பலிகளை செலுத்தமுடியும் என்பதால், இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடத்தைக் கட்டினார்கள். மோசேயின் சட்டத்தில் உள்ளபடி அவர்கள் கட்டினார்கள். மோசே தேவனின் சிறப்புக்குரிய ஊழியன் ஆவான். அந்த ஜனங்கள் தமக்கு அருகில் வாழும் மற்றவர்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் பழைய பலிபீடத்தின் அஸ்திபாரத்தின் மேலேயே கட்டி, அதில் கர்த்தருக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் இப்பலிகளைக் காலையிலும் மாலையிலும் கொடுத்தனர். பிறகு, மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடியே அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினர். பண்டிகையின் ஒவ்வொரு நாளிலும் அவர்கள் குறிப்பிட்ட கணக்கின்படி தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். அதற்குப் பிறகு, கர்த்தர் கட்டளையிட்டபடியே ஒவ்வொரு நாளும், பிறைச்சந்திர நாளிற்காகவும், அனைத்து பரிசுத்த பண்டிகைகளுக்கும், விடுமுறைகளுக்கும் தகனபலிகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் இவற்றைத் தவிர கர்த்தருக்காக கொடுக்க விரும்பிய மற்ற பரிசுகளையும் ஜனங்கள் கொடுக்க துவங்கினார்கள். எனவே, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தருக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆலயம் இன்னும் கட்டப்படாவிட்டாலுங்கூட இது நிகழ்ந்தது.

எஸ்றா 3:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள். அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள். எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக்கணக்கின்படியும் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள். அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள். ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத்தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.