எஸ்றா 1:1-6
எஸ்றா 1:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
எஸ்றா 1:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து, அதை எழுதிவைத்தான். “பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே: “ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார். அவருடைய மக்களில் யார் உங்களோடிருக்கிறானோ அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போகட்டும். அவன் போய் எருசலேமில் இருக்கும் இறைவனும் இஸ்ரயேலின் இறைவனுமான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக. அப்பொழுது இறைவனுடைய மக்கள் எந்த இடங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவ்விடத்திலுள்ள மக்கள் உதவிசெய்ய வேண்டும். இவ்வாறு எருசலேமில் இருக்கிற இறைவனின் ஆலயத்திற்கென வெள்ளி, தங்கம், மற்றும் தேவையான பொருட்கள், வளர்ப்பு மிருகங்களுடன் தேவையான சுயவிருப்புக் காணிக்கையையும் கொடுக்கவேண்டும்.’ ” அப்படியே இறைவனால் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்ட யூதா, பென்யமீன் குடும்பத்தலைவர்களும், ஆசாரியரும், லேவியர்களும் எருசலேமுக்குச் சென்று, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக்கட்ட ஆயத்தம் பண்ணினார்கள். அவர்களுடைய அயலவர்கள் எல்லோரும் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமான பொருட்கள், வேறு பொருட்கள், வளர்ப்பு மிருகங்கள், இன்னும் விலையுயர்ந்த அன்பளிப்புகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அத்துடன் தங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளையும் கொடுத்தார்கள்.
எஸ்றா 1:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எரேமியாவின் வாயினால் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன். அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான். அப்பொழுது எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள். அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கை கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள்.
எஸ்றா 1:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
பெர்சியாவின் ராஜாவாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில், கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு: பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசிடமிருந்து: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், எனக்கு பூமியிலுள்ள அரசுகளையெல்லாம் கொடுத்தார். யூதா நாட்டிலுள்ள எருசலேமில், அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், அவர் எருசலேமில் இருக்கிற தேவன். உங்களோடு தேவனுடைய மனிதர்கள் யாராவது இருப்பின், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் ஜெபிக்கிறேன். அவர்களை நீங்கள் யூதா நாட்டிலுள்ள எருசலேமிற்கு அனுப்பவேண்டும். அவர்கள் சென்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவும் நீங்கள் அனுப்பவேண்டும். பிழைத்திருக்கிற இஸ்ரவேலர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். அந்த ஜனங்களுக்கு வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் மற்ற பொருட்களைக் கொடுக்கவேண்டும். எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்பதாகும். எனவே, யூதா மற்றும் பென்யமீனின் கோத்திரங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும் எருசலேமிற்குச் செல்லத் தயாரானார்கள். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்கள் போனார்கள். தேவன் உற்சாகமூட்டின ஒவ்வொருவரும் எருசலேமிற்குப் போகத் தயாரானார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரர்கள் ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனர். அவர்கள் வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் இலவசமாகக் கொடுத்தார்கள்.