எசேக்கியேல் 5:13-17

எசேக்கியேல் 5:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அப்பொழுது என் கோபம் தீர்ந்துவிடும். அவர்களுக்கெதிரான என் கடுங்கோபமும் தணியும். நான் பழிதீர்த்துக்கொள்வேன். என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவாகிய நான் வைராக்கியத்தோடு அதைப் பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். “மேலும், உன்னைச் சுற்றிலும் வாழும் நாடுகளின் மத்தியில், உன்னைக் கடந்துபோகும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் உன்னைப் பாழும், பழிச்சொல்லுமாக்குவேன். நான் கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும், கடுமையான கண்டிப்பினாலும் உனக்குத் தண்டனை வழங்குவேன். அப்பொழுது நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளுக்கு நிந்தையும், பரிகாசமும், எச்சரிப்பும், பயங்கரக் காட்சியுமாய் இருப்பாய். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். கொடிய பஞ்சத்தின் அம்புகளால் நான் உன்னைத் தாக்கும்போது, உன்னை அழிப்பதற்காகவே அதை எய்வேன். நான் உன்மேல் அதிகமதிகமாய்ப் பஞ்சத்தைக் கொண்டுவந்து உணவு வழங்குவதையும் நிறுத்துவேன். பஞ்சத்தையும் காட்டு விலங்குகளையும் உனக்கு விரோதமாய் அனுப்புவேன். அவைகளினால் நீங்கள் பிள்ளையற்றவர்களாவீர்கள். கொள்ளைநோயும், இரத்தம் சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும். நான் உனக்கு விரோதமாய் வாளையும் வரப்பண்ணுவேன். யெகோவாவாகிய நானே பேசினேன்” என்றார்.

எசேக்கியேல் 5:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படி என்னுடைய கோபம் நிறைவேறும்; இப்படி நான் என்னுடைய உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கச்செய்வதால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, யெகோவாகிய நான் என்னுடைய வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள். கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன். நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாக இருக்கும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கு ஏதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கச்செய்து, உங்களுடைய அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமல் போகச்செய்து காட்டுமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; வாளை நான் உன்மேல் வரச்செய்வேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

எசேக்கியேல் 5:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அதற்குப் பிறகுதான் நான் உங்கள் மீதுள்ள கோபத்தை நிறுத்துவேன். அவர்கள் எனக்குச் செய்த தீமைகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர் என்று அறிவேன். நான் கர்த்தர், அவர்கள் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் நான் அவர்களிடம் பேசினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.” கர்த்தர் கூறினார்; “எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள். உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்! உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும், மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன். நான் பஞ்சகாலத்தின்போது உங்கள் குழந்தைகளைக் கொல்லும் காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன் என்று சொன்னேன். நகரம் முழுவதும் நோயும் சாவுமாக இருக்கும். அந்தப் பகை படை வீரர்களை உங்களோடு சண்டையிட அழைப்பேன். கர்த்தராகிய நான் உனக்கு இவையெல்லாம் நிகழும் என்று சொன்னேன், அவையெல்லாம் நடக்கும்!”

எசேக்கியேல் 5:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள். கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன். நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான்அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற் போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.