எசேக்கியேல் 5:1-12

எசேக்கியேல் 5:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும். உன் முற்றுகையின் நாட்கள் முடியும்போது, அதன் மூன்றில் ஒரு பாகத்தை நகருக்குள் போட்டு எரித்துவிடு. மூன்றில் ஒரு பாகத்தை வாள் முனையால் நகரத்தைச் சுற்றிலும் தூவி விடு. மூன்றில் ஒரு பாகத்தைக் காற்றிலே பறக்க விடு. ஏனெனில் நான் உருவின வாளோடு என் மக்களைப் பின்தொடருவேன். ஆனால், அதில் சில முடிகளை எடுத்து உன் உடையின் மடிப்பிலே முடிந்து வை. மீண்டும் அதில் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் எறிந்து அதை எரித்துவிடு. அந்த அதிலிருந்து நெருப்பு எழும்பி இஸ்ரயேல் வீட்டார் அனைவர்மேலும் தீ பரவும். “ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: நாடுகளின் நடுவே நான் நிலைப்படுத்திய எருசலேம் இதுவே. இது நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் அவள் தன் கொடுமையின் நிமித்தம் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள நாடுகளையும், சூழ இருக்கும் நாடுகளையும் பார்க்கிலும் அதிகமாய் அவள் கலகம் செய்தாள். அவள் என் சட்டங்களைத் தள்ளிவிட்டாள்; எனது கட்டளைகளையும் பின்பற்றவில்லை. “ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிற தேசத்தாரைப் பார்க்கிலும் அடங்காதவர்களாயிருந்தீர்கள். நீங்கள் எனது கட்டளைகளையோ, சட்டங்களையோ பின்பற்றவும் கைக்கொள்ளவும் இல்லை. உங்களைச் சுற்றிலும் இருக்கிற பிறநாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நடந்துகொள்ளவும் இல்லை. “ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எருசலேமே! நான், நானே உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நாடுகளெல்லாம் காணும்படியாக உன்னைத் தண்டிப்பேன். உனது எல்லா வெறுக்கத்தக்க விக்கிரகங்களினிமித்தம் நான் இதுவரை செய்யாததும், இனியொருபோதும் செய்யாதிருப்பதுமான காரியத்தை உனக்குச் செய்வேன். அப்பொழுது உன் மத்தியில் தந்தையர் தம் பிள்ளைகளையும், பிள்ளைகள் தம் தந்தையரையும் தின்பார்கள். நான் உன்னைத் தண்டித்து, உன்னில் மீதியாக இருப்போரை எல்லாத் திசையிலும் சிதறப்பண்ணுவேன். ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அருவருப்பான உருவச் சிலைகளினாலும், வெறுக்கத்தக்க உன் செயல்களினாலும் என் பரிசுத்த இடத்தை அசுத்தமாக்கினபடியால், நான் என் தயவை உன்னைவிட்டு விலக்குவேன். உன்னை இரக்கத்தோடு பார்க்கவோ, தப்பவிடவோ மாட்டேன் என்பதும் நிச்சயம். உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.

எசேக்கியேல் 5:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும். மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றுகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே நெருப்பால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றவேண்டும்; அவைகளின் பின்னாக நான் வாளை உருவுவேன். அதில் கொஞ்சம்மட்டும் எடுத்து, அதை உன்னுடைய ஆடையின் ஓரங்களில் முடிந்துவைக்கவேண்டும். பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரி; அதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் எதிராக அக்கினி புறப்படும். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது. அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள். ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளைவிட அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என்னுடைய கட்டளைகளிலே நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியோ நடக்காமலும் போனபடியினாலே, இதோ, நான், நானே உனக்கு எதிராக வந்து, அந்நியஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, நான் முன்பு செய்யாததும் இனிச் செய்யாமல் இருப்பதுமான விதமாக உனக்கு உன்னுடைய எல்லா அருவருப்புகளுக்காகவும் செய்வேன். ஆதலால் உன்னுடைய நடுவிலே தகப்பன்மார்கள் பிள்ளைகளைச் சாப்பிடுவார்கள்; பிள்ளைகள் தகப்பன்மார்களைச் சாப்பிடுவார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாக இருப்பவர்களையெல்லாம் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆதலால், சீ என்று இகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன்னுடைய கிரியைகளால் நீ என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினதால் என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகச்செய்வேன், நான் இரங்கமாட்டேன், இதை என்னுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் மரணமடைவார்கள், பஞ்சத்தாலும் உன்னுடைய நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்து, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.

எசேக்கியேல் 5:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

“மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக்கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித்துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப்பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும். ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும். பிறகு பறந்துபோன இன்னும் கொஞ்சம் முடியை எடுத்து வரவேண்டும். அவற்றை நெருப்பில் போடவேண்டும். அங்கு நெருப்பொன்று எரிய ஆரம்பித்து இஸ்ரவேல் வீடு முழுவதையும் அழிக்கும் என்பதை இது காட்டுகிறது.” பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன. எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.” எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!” எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன். நான் இதற்கு முன்னால் செய்யாதவற்றை உனக்குச் செய்வேன். நான் பயங்கரமானவற்றை மீண்டும் செய்யமாட்டேன்! ஏனென்றால், நீ ஏராளமான கொடூரமானச் செயல்களைச் செய்தாய். பெற்றோர் தம் குழந்தைகளைத் தின்பார்கள். அத்தகைய பசியில் எருசலேம் ஜனங்கள் இருப்பார்கள். பிள்ளைகளும் தம் சொந்த பெற்றோர்களைத் தின்பார்கள். நான் உன்னைப் பல வழிகளில் தண்டிப்பேன்! மீதி வாழ்கிற ஜனங்களை நான் காற்றிலே தூவுவேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எருசலேமே, நான் உன்னைத் தண்டிப்பேன் என்று என் உயிரின்மேல் சத்தியம் செய்கிறேன். ஏனென்றால், எனது பரிசுத்தமான இடத்தில் நீ கொடூரமான செயலைச் செய்தாய். அதனைத் தீட்டுப்படுத்துமாறு நீ அருவருப்பான செயல்களைச் செய்தாய்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னிடம் இரக்கம்கொள்ளமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன்.

எசேக்கியேல் 5:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய். மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன். அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக. பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது. அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போனார்கள். ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே, இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன். ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.