எசேக்கியேல் 38:5-23
எசேக்கியேல் 38:5-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தலைக்கவசம் அணிந்து கேடயம் பிடித்திருக்கும் பெர்சியரும், எத்தியோப்பியரும், பூத்தியரும் அவர்களோடு வருவார்கள். கோமேரும் அதன் எல்லாப் படைகளும், வடக்கே தொலைவிலுள்ள பெத் தொகர்மாவும், அதன் எல்லாப் படைகளும் உன்னோடிருக்கும் அநேக தேசத்தாருங்கூட அவர்களோடு வருவார்கள். “ ‘நீயும் உன்னைச்சூழ இருக்கும் எல்லா கூட்டத்தாரும் தயாராகுங்கள், நீ அவர்களுக்குத் தலைமை தாங்க ஆயத்தப்படு. அநேக நாட்களுக்குப்பின் நீ போருக்கு அழைக்கப்படுவாய். வரும் வருடங்களில், போர்த் தாக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும் இஸ்ரயேல் நாட்டின்மேல் நீ படையெடுப்பாய். அந்த நாட்டின் மக்கள் பல நாடுகளிலுமிருந்து ஒன்றுசேர்க்கப்பட்டு, நெடுங்காலமாய்ப் பாழடைந்துகிடந்த இஸ்ரயேலரின் மலைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் எல்லோரும் பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டு இப்பொழுது பாதுகாப்பாக வாழ்கிறார்கள். நீயும், உனது எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் அநேக நாடுகளும் அவர்களை எதிர்த்து ஒரு புயலைப்போல் முன்னேறுவீர்கள். நீங்கள் கார்மேகம்போல் அந்த நாட்டை மூடுவீர்கள். “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அப்பொழுது உன் மனதில் எண்ணங்கள் எழும்பும். நீ தீமையான திட்டமொன்றைத் தீட்டுவாய். அப்பொழுது நீ, “நான் மதில் இல்லாத கிராமங்களுடைய நாட்டின்மேல் படையெடுப்பேன். மதில்களும், வாசல்களும், தாழ்ப்பாள்களும் இன்றி, சமாதானத்துடன் பயமின்றி வாழும் மக்களை நான் தாக்குவேன். பாழாக்கப்பட்டு திரும்பவும் குடியேற்றப்பட்ட இடங்களைக் கொள்ளையிட்டு, சூறையாடி, அவற்றிற்கு விரோதமாய் என் கைகளை உயர்த்துவேன். எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூட்டப்பட்டு ஆடுமாடுகளிலும், பொருள்களிலும் செல்வச் செழிப்புடையவர்களாய் நாட்டின் மத்தியில் வாழும் மக்களுக்கு விரோதமாகவும் என் கையைத் திருப்புவேன் என்பாய்.” சேபா, தேதான் நாட்டவர்களும், தர்ஷீஸ் வர்த்தகர்களும், அவர்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உன்னிடம், “நீ சூறையாடவா வந்தாய்? கொள்ளையடிக்கவும், வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்துக்கொள்ளவும், ஆடுமாடுகளையும் பொருட்களையும் கொண்டுபோகவும், பெருங்கொள்ளையை அபகரிக்கவுமா இப்பெருங்கூட்டத்தைச் சேர்த்தாய்?” ’ என்பார்கள். “ஆதலால் மனுபுத்திரனே, நீ இறைவாக்குரைத்து, கோகு என்பவனுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ அந்நாளிலே என் மக்களாகிய இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வதை நீ கண்டு, எழுந்து உனது இருப்பிடமான வடதிசையின் தொலைவிலிருந்து வருவாய். அநேக நாடுகளும் உன்னோடு வருவார்கள். அவர்களெல்லாரும் ஒரு பெருங்கூட்டமாக, வலிமையுள்ள இராணுவமாக குதிரைகள் மீது வருவார்கள். நீயோ நாட்டை மூடும் ஒரு கார்மேகம்போல, என் மக்களான இஸ்ரயேலருக்கு விரோதமாக வருவாய். கோகே, வரப்போகும் நாட்களிலே, நாடுகளின் கண்களுக்கு முன்பாக உன்னை என் நாட்டுக்கு எதிராகக் கொண்டுவருவேன். உனக்கு நடப்பதன் மூலம் நான் என்னைப் பரிசுத்தராகக் காட்டும்போது, அவர்கள் என்னை அறிந்துகொள்வார்கள். “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் அடியவர்களான, இஸ்ரயேலின் இறைவாக்கினரைக்கொண்டு பூர்வ நாட்களிலே நான் பேசியது உன்னைக் குறித்தல்லவா? அந்நாட்களிலே நான் உன்னை என் மக்களுக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன் என்பதாக வருடக்கணக்கில் அவர்கள் இறைவாக்குரைத்தார்களே! அந்நாளில் நடக்கப்போவது இதுவே: கோகு என்பவன் இஸ்ரயேலைத் தாக்கும்போது, என் கடுங்கோபம் எழும்பும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேல் நாட்டில் ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாகும் என்பதாக எனது வைராக்கியத்திலும், கடுங்கோபத்திலும் நான் அறிவிக்கின்றேன். கடலின் மீன்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், நிலத்தில் ஊரும் ஒவ்வொரு பிராணியும், பூமியிலுள்ள எல்லா மக்களும் எனது சமுகத்தில் நடுங்குவார்கள். மலைகள் புரட்டப்படும். செங்குத்தான பாறைகள் நொறுங்கும். ஒவ்வொரு மதிலும் தரையில் விழும். கோகுவே, எனது எல்லா மலைகளின்மேலும் உனக்கு விரோதமாக ஒரு வாளை வரப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். உனது மனிதர் ஒவ்வொருவரும் தமது வாளை ஒருவருக்கொருவர் விரோதமாகப் பயன்படுத்துவார்கள். கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன். உன்மேலும், உனது இராணுவங்கள்மேலும், உன்னோடிருக்கும் அநேக நாடுகளின்மேலும் பெருமழையையும், பனிக்கட்டி மழையையும், எரியும் கந்தகத்தையும் நான் ஊற்றுவேன். இவ்விதமாய் அநேக நாடுகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் நான் காண்பிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’
எசேக்கியேல் 38:5-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்களுடன் கூட பெர்சியர்களும், எத்தியோப்பியர்களும், லீபியர்களும் இருப்பார்கள்; அவர்களெல்லோரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவும் அணிந்திருப்பவர்கள். கோமரும் அவனுடைய எல்லா படைகளும் வடதிசையிலுள்ள தொகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான மக்கள் உன்னுடன் இருப்பார்கள். நீ ஆயத்தப்படு, உன்னுடன் இருக்கிற உன்னுடைய எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலனாக இரு. அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; வாளுக்கு விளக்கி, பற்பல மக்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருடங்களிலே வருவாய்; நெடுநாட்கள் பாழாய் கிடந்து, பிற்பாடு இனத்தவர்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லோரும் சுகத்துடன் குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாக வருவாய்; அவர்கள் எல்லோரும் பயப்படாமல் குடியிருக்கும்போது, பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கும் திரளான மக்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்த நாளிலே பாழாய் கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு விரோதமாகவும், மக்களிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான மக்களுக்கு விரோதமாகவும், நீ உன்னுடைய கையைத் திருப்பும்படி, உன்னுடைய இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்திற்கு விரோதமாகப்போவேன்; அலட்சியமாக சுகத்துடன் குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லோரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய். சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வியாபாரிகளும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும், மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள். ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் சுகமாகக் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ? அப்பொழுது நீயும் உன்னுடன் திரளான மக்களும் வடதிசையிலுள்ள உன்னுடைய இடத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான கூட்டமாக இருந்து, எல்லோரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாக இருப்பார்கள். நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது நடக்கும்; கோகே, இனத்தார்களின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாக நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறிவதற்கு உன்னை என்னுடைய தேசத்திற்கு விரோதமாக வரச்செய்வேன். உன்னை அவர்களுக்கு விரோதமாக வரச்செய்வேன் என்று ஆரம்ப நாட்களிலே அநேக வருடகாலமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என்னுடைய ஊழியக்காரர்களைக்கொண்டு, அந்த நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என்னுடைய கடுங்கோபம் என்னுடைய நாசியில் ஏறுமென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். அந்த நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி, என்னுடைய பிரசன்னத்தினால் கடலின் மீன்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற எல்லா பிராணிகளும், தேசமெங்குமுள்ள எல்லா உயிரினங்களும் அதிரும்; மலைகள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோகும் என்று என்னுடைய எரிச்சலினாலும் என்னுடைய கோபத்தின் அக்கினியினாலும் நிச்சயமாகச் சொல்லுகிறேன். என்னுடைய எல்லா மலைகளிலும் வாளை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் வாள் அவனவன் சகோதரனுக்கு விரோதமாக இருக்கும். கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனுடன் வழக்காடி, அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடன் இருக்கும் திரளான மக்களின்மேலும் வெள்ளமாக அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் பெருகச்செய்வேன். இப்படியாக நான் அநேக தேசங்களின் கண்களுக்கு முன்பாக என்னுடைய மகத்துவத்தையும் என்னுடைய பரிசுத்தத்தையும் விளங்கச்செய்து, காண்பிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 38:5-23 பரிசுத்த பைபிள் (TAERV)
பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள். “‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’ “சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’” தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 38:5-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்களோடுகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந்தரித்திருப்பவர்கள். கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள். நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது, பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு, உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய். சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள். ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ? அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள். நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வ நாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி, என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோகும் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும். கொள்ளைநோயினாலும் இரத்தம்சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.